நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: கிடுகிடுவென உயரும் அணையின் நீர்மட்டம்….!!

18 November 2020, 11:05 am
papanasam dam - updatenews360
Quick Share

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைப்பகுதியில் 138 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 101.50 அடியாக இருந்தது.

papanasam - updatenews360

அணையின் நீர்மட்டம் நேற்று 111.20 அடியாக அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் உள்பகுதியில் உள்ள பானதீர்த்தம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மாவட்டம் முழுவதும் மழை பெய்வதால் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் அளவு 812 கன அடியாக குறைக்கப்பட்டது.

மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 900 கன அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் 82.80 அடியில் இருந்து 86.10 அடியாக உயர்ந்து இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக பெருங்கால்வாயில் 25 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டு உள்ளது. 52 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 35 அடியாக உள்ளது.

தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. கடனா அணை நீர்மட்டம் 72 அடியில் இருந்து 76.50 அடியாக அதிகரித்து உள்ளது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 69.50 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து 145 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 58 அடியில் இருந்து 62 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 172 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் உள்ளது.

அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 95.50 அடியில் இருந்து 97 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 66 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது. இந்த மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகள் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளன.