அடுத்த தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்: சீமான் தலைமையை ஏற்க ம.நீ.ம., அமமுக-தேமுதிக முடிவு?

6 May 2021, 9:34 pm
Quick Share

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை தந்த 3-வது அணி என்று சீமானின் நாம் தமிழர் கட்சியை சொல்லலாம். 2016 தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சி பெற்றதென்னவோ வெறும் 4 லட்சம் ஓட்டுகள்தான். இது, பதிவான மொத்த வாக்குகளில் ஒரு சதவீதம்தான். 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சுமார் 17 லட்சம் ஓட்டுகளை பெற்றது. இது 4 சதவீதம் ஆகும்.

Seeman -Updatenews360

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சுமார் 30 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. சதவீதக் கணக்கில் இது 6.67 விழுக்காடு. மற்ற மூன்றாவது அணிகளான மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தே இந்த தேர்தலை சந்தித்தன. என்றபோதிலும் இந்த இரு கட்சிகளுக்கும் கிடைக்காத அங்கீகாரம் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமானுக்கு மிக அதிக பட்சமாக சுமார் 48 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தது. இதுதவிர அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட 2 வேட்பாளர்கள் 30 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளனர். 25 முதல் 30 ஆயிரம் வரையிலான ஓட்டுகளை 18 பேரும், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான வாக்குகளை 173 வேட்பாளர்களும் பெற்றுள்ளனர்.எனவே நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 3-வது அணிகளில் நாம் தமிழர் கட்சியின் கையே ஓங்கி இருப்பது தெரிய வருகிறது.

Seeman -Updatenews360

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 1800 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்றாலும்கூட அவருடைய கட்சி மாநிலம் முழுவதுமாக 2.4 சதவீத வாக்குகளே பெற்றது. இதேபோல் கோவில்பட்டியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தை பிடித்தாலும் கூட அவருடைய கட்சிக்கு மொத்தமாக 2.47 சதவீத ஓட்டுகள்தான் கிடைத்தது. அமமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக 0.45 விழுக்காடு ஓட்டுகளை பெற்றது.

மொத்தத்தில் இந்த மூன்று அணிகளும் சேர்ந்து பெற்ற வாக்குகள் 12 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த சதவீதத்தை பார்த்து, வலுவான 3-வது அணி தமிழகத்தில் உருவாகவேண்டும் என்று விரும்பும் மூத்த அரசியல் தலைவர்கள் சிலர், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக- தேமுதிக ஆகியவற்றை ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவை நடப்பதற்கு முன்பாகவே, அதாவது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இந்த மூன்று அணிகளையும் ஒன்றாக இணைக்க முயற்சிகள் நடந்தது.

ஆனால் இந்த அணிக்கு தலைமை தாங்குவது யார்? யார் யாருக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது? என்ற கேள்விகள் விஸ்வரூபம் எடுத்ததால் வலுவான மூன்றாவது அணியை உருவாக்க நினைத்த சிலரால் அந்த முயற்சி கைகூடாமல் போனது. தற்போது, இந்த எண்ணம் மீண்டும் வலுப்பெற்று இருக்கிறது. இதனால் சீமான், கமல், தினகரன் மூவரையும் அந்த மூத்த அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட முறையில் அண்மையில் சந்தித்துப் பேசி இவர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையிலும் இறங்கிவிட்டனர்.

முதலில் இதற்கு சீமான் தயங்கியிருக்கிறார். “கடந்த 3 தேர்தல்களிலும் நான் தனித்துப் போட்டியிட்டே வந்திருக்கிறேன். எனவே இது சாத்தியப்படாத ஒன்று” என அவர் மறுத்து இருக்கிறார். அதற்கு, “2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தற்போது 3 அணிகளும் பெற்றுள்ள வாக்குகள் சதவீத அடிப்படையில் தொகுதிகளை பகிர்ந்துகொண்டு தேர்தலை சந்திக்கலாம்” என்று அந்த மூத்த தலைவர்கள் சீமானிடம் ஆலோசனை கூறி இருக்கிறார்கள். அதற்கு சீமான், “நீங்கள் கமலிடமும், தினகரனிடமும் இதை அப்படியே கூறி ஒப்புதல் வாங்குங்கள்” என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அந்த மூத்த தலைவர்கள் கமல்ஹாசனையும், டிடிவி தினகரனையும் சந்தித்துப் பேசியுள்ளனர். “நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 வருடங்களும், அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 5 ஆண்டுகளும் இருப்பதால் இப்போதே அதைப் பற்றி பேச வேண்டுமா?… இந்தத் தேர்தலில் எங்களுக்கு எப்படி தோல்வி ஏற்பட்டது என்பது பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அதற்குள் என்ன அவசரம்?…அடுத்து உள்ளாட்சித் தேர்தல் இன்னும் 6 மாதத்துக்குள் நடக்குமென்று நம்புகிறோம். அதில் எங்கள் கட்சிகளின் உண்மையான பலம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வோம்” என்று அவர்கள் இருவரும் பதில் கூறியதாக தெரிகிறது.

இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகியவை ஒரே அணியாக போட்டியிட ஆர்வம் கொண்டிருப்பதையும், இந்த அணிக்கு சீமானை தலைவராக ஏற்றுக்கொள்ள கமலும், தினகரனும் தயாராகவே இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தில் வலிமையான 3-வது அணி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் அந்த மூத்த தலைவர்களில் சிலர் கூறும்போது, “நடந்து முடிந்த தேர்தலில் சீமான் கட்சி 30 லட்சம் வாக்குகளையும், அமமுக- தேமுதிக கூட்டணி 13 லட்சம் ஓட்டுகளையும், மக்கள் நீதி மய்யம் கூட்டணி 12 லட்சம் வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.

எனவே அடுத்த தேர்தலுக்கு முன்பாகவே வலிமை கொண்ட மூன்றாவது அணியை உருவாக்குவது மிகவும் அவசியம். இந்த 3 கட்சிகளின் தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேசிவிட்டால் இது சாத்தியம்தான். இவர்கள் மூவரும் ஒரே அணியாக இணைந்து போட்டியிட்டால் அதிகபட்சமாக 22 சதவீத வாக்குகளை பெறமுடியும்.இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் 6 முதல் 9 இடங்களை மூன்றாவது அணி கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை 60 இடங்களுக்கும் குறையாமல் வெற்றி பெற இயலும் என்று நம்புகிறோம்.

எனவேதான் இப்போதே 3-வது அணி அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறோம். கொள்கை ரீதியாக இந்த 3 கட்சிகளுக்கும் இடையே சில முரண்பாடுகள் இருந்தாலும் கூட அவற்றை களைவதற்கான யோசனைகளையும் தெரிவித்திருக்கிறோம்” என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தமிழகத்தில் வலுவான 3-வது அணி இப்போதே அமையுமா?… அதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 311

0

0