தங்க முலாம் பூசிய நகைகளை அடகு வைத்து ஏமாற்றிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி: தனியார் நிதி நிறுவனம் மோசடி புகார்

19 June 2021, 9:52 pm
Quick Share

சென்னை: சென்னை அருகே தங்க முலாம் பூசிய நகைகளை அடகு வைத்து ஏமாற்றிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வியாசர்பாடி காவல் நிலையத்தில் தனியார் நிதி நிறுவனம் மோசடிப் புகார் அளித்துள்ளனர்.

சென்னை எம்.கே.பி.நகர் பகுதியில் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் கடந்த 12 வருடங்களாக மேலாளராக பணிபுரிபவர் கவிதா. இவர், காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்ற நபர் கடந்த மார்ச் மாதம் 26 கிராம் தங்கத்தை அடகு வைத்து 83 ஆயிரம் ரூபாய் பெற்று சென்றதாகவும், அதன் பிறகு அவரது மனைவி ஹேமாவதி கடந்த ஏப்ரல் மாதம் 17 கிராம் அளவுள்ள தங்க நகையை அடமானம் வைத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுச் சென்றதாகவும்,

அதன் பிறகு வைத்த நகைகளுக்கு மாத வட்டி கட்டாத காரணத்தினால் பலமுறை அவர்களை தொடர்பு கொண்டு நகையை மீட்டுக் கொள்ள சொல்லியும், அவர்கள் வந்து நகையை மீட்டு கொள்ளாததால் சந்தேகமடைந்து நகையை பரிசோதித்த போது அவர்கள் வைத்த நகை தங்க முலாம் பூசப்பட்ட நகை என்பது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் சரவணகுமார் நாம் தமிழர் கட்சியில் பெரம்பூர் தொகுதி செயலாளராக உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 114

0

0