துறைமுகத் திட்டத்தை குமரியில் வர விடமாட்டோம் : காங்கிரஸ் பிரமுகரின் வாரிசு எதிர்ப்பு!!!
25 February 2021, 3:43 pmகன்னியாகுமரி : சரக்குப் பெட்டக மாற்று துறைமுகம் வந்தால் கடலோர மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும் என்பதால் துறைமுகத் திட்டத்தை வர விடமாட்டோம் என காங்கிரஸ் கட்சி பிரமுகரின் வாரிசு தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை அருகே நேற்று நள்ளிரவு மின் அழுத்தம் காரணமாக டிவி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டு சேதமடைந்த வீடுகளை இன்று தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான விஜய் வசந்த் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமையும் என்ற அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. ஏற்கனவே இந்த துறைமுகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்தால், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து மீன் உற்பத்தி அடியோடு குறையும் என்பதால் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினரும் எனது தந்தையுமான வசந்தகுமார் அதனை எதிர்த்தார்.
எனவே இந்த துறைமுகத்தை வர விடமாட்டோம். ஏற்கனவே விவசாயிகளை வஞ்சித்த மத்திய அரசு தற்போது பெட்ரோல் விலை உயர்வின் மூலம் பொது மக்களையும் வாட்டி வதைக்கிறது. ராகுல் காந்தியின் வருகையால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி ஏற்படுமே தவிர பின்னடைவு ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
0
0