திமிங்கல உமிழ் நீர் கடத்தல் கும்பல் கைது: 5 கோடி திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல்…

Author: kavin kumar
24 October 2021, 4:31 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் 5 கோடி மதிப்பிலான திமிங்கில உமிழ்நீர் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிகளில் கடந்த சில வருடங்களாக இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டு திமிங்கலத்தின் உமில் நீர் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் பகுதியில் திமிங்கிலத்தின் உமிழ்நீர் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் ஆய்வாளர் இளகுமணன் தலைமையில் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினரும் திருவாரூர் மாவட்ட வனத்துறையினரும் கிடைத்த தகவலின் அடிப்படையில் உப்பூர் என்ற இடத்திற்கு சென்றனர். அதனை அடுத்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக அங்கு பதுக்கி வைத்திருந்த 5 கோடி மதிப்பிலான எட்டு கிலோ எடையுள்ள திமிங்கில உமிழ்நீரை கட்டியாக மாற்றி மூன்று கட்டிகளை பதுக்கி வைத்து இருந்ததை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் இருந்த முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீன் மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் இருவரிடமும் குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் துறையினரும் வனத்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளிவந்துள்ளன. முத்துப்பேட்டை பகுதியில் அதிக அளவில் உள்நாட்டு மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அதனடிப்படையில் ஒரு சில நபர்கள் இலங்கையிலிருந்து திமிங்கலத்தின் உமிழ்நீரை கட்டியாக மாற்றி கடத்தி வந்து எங்களிடம் விற்பனை செய்வார்கள், அதனை நாங்கள் பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்வோம் என காவல்துறையினரிடம் கைது செய்யப்பட்ட நிஜாமுதீன் மற்றும் ஜாகிர் உசேன் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து இருவர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரண்டு நபர்களையும் நன்னிலம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் துறையினரும், வனத்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்திய அரசால் 1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் திமிங்கிலத்தை பிடித்து அதனை கொன்று அதனிடம் இருந்து வெளிவரும் உமிழ் நீரை கடத்தல் செய்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தொடர்கதையாக இருந்து வந்தது. அதனை அடுத்து இந்திய மிருகவதை தடுப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதற்குப் பின்னர் திமிங்கலத்தை யார் கடத்தினாலும் அவர்கள் மீது மிருக வதை தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வந்தார்கள். அதனால் பல ஆண்டுகளாக  திமிங்கலத்தை கொன்று அதன் உடல் உறுப்புகள் கடத்தப்படும் சம்பவம் வெகுவாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் தற்பொழுது கடத்தல் சம்பவம் தொடர தொடங்கியுள்ளது. உடனடியாக வனத்துறையினர் மற்றும் கடலோர காவல் துறையினர் கடலோர பகுதிகளில் அதிக அளவில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும், அதேபோன்று வனத்துறையினர் அனுமதி இல்லாமல் காடுகளுக்குள் யாரேனும் வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Views: - 379

0

0