இப்பவே இவ்ளோ பிரச்சனை… இன்னும் 4 வருஷத்துல என்னென்ன பார்க்க வேண்டியது இருக்கோ : பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வேதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2022, 1:49 pm
Bjp Mla Nainar - Updatenews360
Quick Share

விழுப்புரம் : மத்திய அரசின் திட்டங்களுக்கு, திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்துவருகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 8 ஆண்டுகள் நிறைவு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்பொழுது பேசிய நயினார் நாகேந்திரன், 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் இல்லாத நிலை உள்ளது. ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியது தான் சாதனை. குறிப்பாக நிலையான ஆட்சியை நாட்டிற்கு வழங்கியவர் பிரதமர் மோடி. மோடி மட்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் நம்முடைய நிலை பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கும். இலங்கை போன்ற பாதகமான சூழலை எட்டியிருக்கும்.

அதேபோன்று குடும்ப ஆட்சி என்பது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு உதாரணமே இலங்கைதான். இலங்கையின் பல்வேறு பொறுப்புகள் மற்றும் பணிகள் ராஜபக்சேவின் குடும்பத்தால் கையகப்படுத்தப்பட்டது. அதன் விளைவு நாட்டு மக்களிடம் பணம் இல்லை. ராஜபக்சே குடும்பத்திடம் மட்டுமே பணம் உள்ளது.

திமுக ஒரு பலமில்லாத கட்சியாக திகழ்ந்து வருகிறது. இதனால்தான் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சி நடத்தி விடலாம் என நம்புகிறது.

இளைஞர்களே அதிகம் கவர்ந்த கட்சியாக பாஜக இருந்து வருகிறது. குறிப்பாக அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு குழந்தைகளும், இளைஞர்களும் பாஜகவின் ஆதரவு நிலைக்கு வந்துள்ளதுடன், பாஜகவுக்கு ஒரு வாக்கு சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு, திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்துவருகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக சென்னையில் பெண்கள் தனியே நடந்து செல்ல முடியாத அவலம் நிலவுகிறது.

கச்சத்தீவை தாரை வார்த்தது அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியும், முதல்வராக இருந்த கருணாநிதியும் தான். ஆனால் தற்போதைய திமுக அரசு கச்சத்தீவை மீட்போம் என வாக்குறுதி கொடுக்கிறது. கட்சத்தீவை தாரைவார்த்து விட்டு அதை மீட்போம் என கூறுகிறார்கள். அவர்களால் கச்சத்தீவை மீட்க முடியாது. பிரதமர் மோடி மனது வைத்தால்தான் கச்சத்தீவை மீட்க முடியும். கச்சத்தீவை மீட்கும் காலம் வரும்.

திமுக ஆட்சியில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது இந்த நான்கு ஆண்டுகளுக்குள் இன்னும் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்று தெரியவில்லை.

பிஜேபி தான் மக்களுக்கான பொதுவான கட்சி அந்த கட்சி மட்டுமே மக்களுக்கு நல்லது செய்யும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி இன்னும் 80 ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து நீடிக்கும் என்றார்.

Views: - 474

0

0