விஜய் இருக்கும் நிகழ்வில் நான் ஏன் கலந்து கொள்ளவில்லை? திருமாவளவன் விளக்கம்

Author: Hariharasudhan
6 December 2024, 9:49 am

என்னை ஒரு கருவியாக கொண்டு அரசியல் காய் நகர்த்த எதிரிகள் முயற்சிக்கிறார்கள் என விஜய் கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்காதது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் “- இது புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து தனியார் பதிப்பகம் வெளியிடும் நூல். ஆதவ் அர்ஜூனில் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ என்னும் தேர்தல் உத்திகளை வகுக்கும் தன்னார்வ அமைப்பும் இதன் இணை வெளியீட்டு நிறுவனமாகும். இது புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று (திசம்பர் -06) சென்னையில் வெளியிடப்படுகிறது. முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் என்னுடைய நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழா கடந்த ஏப்ரல் 14- புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவதாகவும், நான் பெற்றுக் கொள்வதாகவும் பெற்ற சொல்லப்பட்டது. அந்நிகழ்வில் ஆங்கில இதழின் ஆசிரியர் இராம் மும்பையிலிருந்து ஆனந்த்டெல்டும்டேவும் பங்கேற்கவிருப்பதாகத் திட்டம் இருந்தது. ஆனால், அந்நிகழ்வு திட்டமிட்டவாறு நடைபெறாமல் தள்ளிப்போனது. சில மாதங்களுக்குப் பின்னர் முதல்வர் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், இராகுல்காந்தியை அழைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியும்கூட நிறைவேறவில்லை என்றும் தகவல்கள் கிடைத்தன. அதன்பின்னர், நடிகர் விஜய் பங்கேற்க இசைவளித்துள்ளார் என சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Thirumavalavan on why he not participate ambedkar book event

அத்துடன், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலும் அழைப்பிதழ் அச்சிடப்படாமலும் இருந்த சூழலாகும். நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக- தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. விஜய் கட்சி மாநாட்டுக்குப் பிறகு அவ்வாறு வெளியிட்டது. அதாவது. “டிசம்பர்-06, விஜய் திருமா ஒரே மேடையில்” என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது. இது தான் அவ்விழாவைப் பற்றிய ‘எதிரும் புதிருமான’ உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பல்வேறு யூகங்களுக்கும் இடமளித்தது. குறிப்பாக, மரபு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவை கூட்டணி தொடர்பான உரையாடல்களாக அரங்கேறின.

ஒரு நூல் வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது அந்த நாளேடு தான். அது ஏன்? அந்த நாளேட்டுக்கு அந்தத் தகவல் எப்படி கிடைத்தது? அதாவது, பதிப்பகத்தில் ஒரு சிலருக்கும், ‘விஓசி’ நிறுவனத்தில் ஓரிருவருக்கும், அடுத்து எனக்கும் மட்டுமே அப்போதைக்குத் தெரிந்திருந்த அச்செய்தி, எப்படி அந்த நாளேட்டின் கவனத்துக்குப் போனது அதிகாரப்பூர்வமாக பதிப்பகமோ, விஓசி நிறுவனமோ உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை அந்த நாளேடு ஏன் பூதாகரப்படுத்தியது? அதற்கு ஏன் திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது? கடந்த முப்பந்தைந்து ஆண்டுகளில் விடுதலைச் சிறுத்தைகளையோ, திருமாவளவனையோ ஒரு பொருட்டாகவேக் கருதாத அந்த நாளேடு, திடுமென தலைப்புச் செய்தியில் எனது பெயரைப் பதிவு செய்திருக்கிறது என்றால் அதன் உள்நோக்கம் என்ன? என்னைப் பற்றியும் விசிக பற்றியும் எதிர்மறையாக மட்டுமே செய்திகள் வெளியிடுவதைத் தனது தார்மீகக் கடமையாகக் கருதி தொடர்ந்து செயல்பட்டுவரும் அந்த நாளேட்டுக்குத் திடீரென என்மீது நல்லெண்ணக் கரிசனம் எங்கிருந்து வந்தது? அந்த நாளேட்டின் அத்தகைய செயற்பாட்டில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்பது “உள்ளங்கை நெல்லிக்கனி” போல தெற்றெனத் தெரிகிறது. அந்த நாளேட்டு நிறுவனத்துக்கு அப்படி என்ன உள்நோக்கம் இருக்கமுடியும்?

இவ்வினா எழுவது இயல்பேயாகும். திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் அய்யத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும் தான் அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும். “திமுகவைத் தனது அரசியல் எதிரி என வெளிப்படையாகப் பேசியும், ‘திராவிட முன்மாதிரி அரசு என்பதைக் கடுமையாக விமர்சித்தும் தனது மாநாட்டில் உரையாற்றியுள்ள விஜய், உங்கள் கூட்டணியிலுள்ள திருமாவளவன் ஒரே மேடையில் ஏறப் போகிறார் பாருங்கள் -என திமுக தொண்டர்களுக்குச் செய்தி சொல்வதும்; அதனடிப்படையில் என் மீதான அரசியல் நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குவதும் தான் அந்த நாளேட்டின் நோக்கமென்பது “வெள்ளிடை மலையென” வெளிப்படுகிறது.

அந்த நாளேட்டுக்கு அப்படியொரு உள்நோக்கம் இல்லையெனில், அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்திக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே. எதிரும், புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே! இந்திய அமைச்சர் இராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் நின்றபோதும் அந்த நாளேடு அப்படித்தான் தலைப்புச் செய்தி வெளியிட்டதா இந்நிலையில், இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து அதனைப் பூதாகரப்படுத்திய அந்த நாளேட்டின் சதி அரசியல் பற்றி ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை அடுத்து, இந்த விழாவில் பங்கேற்க நான் ஓராண்டுக்கு முன்னரே இசைவளித்துவிட்டேன்.

விஜய் மாநாட்டு உரைக்கு முன்னர், அவர் வருவதை அறிந்தபோதும்கூட அந்நிகழ்வில் நான் பங்கேற்பதை பதிப்பகத்தாரிடம் உறுதி செய்துவிட்டேன். ஆனால், அவரது மாநாட்டு உரைக்குப் பின்னர், ‘அவர் நூல் வெளியீட்டு விழா மேடையில் என்ன பேசுவோரோ என்கிற அச்சத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினேன். அப்போது, “அவர் துளியும் அரசியல் பேசமாட்டாரென” பதிப்பகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: காமமோகத்தின் இழிவான உச்சம்.. 7 மாத பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

அதன்பின்னர் தான், அந்த நாளேடு இப்படியொரு தலைப்புச் செய்தியை வெளியிட்டுச் சமூக ஊடகங்களுக்குத் தீனி போட்டது. ‘வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதையாக இன்று வரையிலும் பலபேர் அதனை அசைபோட்டுக் கொண்டே உள்ளனர். அந்த நாளேட்டின் உள்நோக்கம் பற்றி அலச விரும்பாமல் மிக இயல்பாக அதனைக் கடந்து போகிறவர்கள், பதிப்பகம் எடுத்த முடிவு பற்றியும் பேசாமல் மவுனித்திருப்பது ஏன் அந்த நாளேட்டின் சதி அரசியல், தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. அவர் இனிமேல் தான் கூட்டணி அமைக்கப் போகிறார். ஆனால், விசிக ஏற்கனவே ஒரு கூட்டணியைத் தோழமை கட்சிகளோடு இணைந்து உருவாக்கியிருக்கிறது. திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதையும் அதன்மூலம் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுப்பதையும் தனது முதன்மையான கடமைகளாகவும் கொண்டு செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் அந்த நாளேட்டின் உள்நோக்கத்தையும் அத்தகைய சக்திகளின் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்கும் அரசியல் நெருக்கடியை விசிக எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகியது. யார் என்ன சொன்னாலும் அதனைப் பொருட்படுத்தாமல் விஜய் அவர்களோடு மேடையேறும் துணிச்சல் திருமாவளவனுக்கு இல்லையா? அது அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டுவிழா தானே அதனை அவர் புறக்கணிக்கலாமா திரையுலகின் சாதனையாளராகப் புகழ்பெற்ற கவர்ச்சிமிகு கதாநாயகர் விஜய்யோடு மேடை ஏறுவதற்கு கிடைத்த ஒரு அளப்பரிய வாய்ப்பை அவர் நழுவ விடலாமா?

Thirumavalavan explains why I not participate ambedkar book event

அப்படியே ஒருவேளை அவரோடு கூட்டணி அமைத்தால்தான் என்ன தவறு? திருமாவுக்கு காலச் சூழலுக்கேற்ப அரசியல் செய்யத் தெரியவில்லையா? வராதுபோல் வந்த மாமணி போல் ஒரு வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்குச் சூழலைக் கையாளத் தெரியாமல் அவர் தடுமாறுகிறாரா? திமுக அவரை அச்சுறுத்துகிறதா? அந்த அச்சுறுத்தலுக்கு அவர் பணிந்து விட்டாரா? திமுக கூட்டணியை விட்டு வெளியேற அவரை எது தடுக்கிறது?இவ்வாறு சிலர் தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் பல்வேறு ஊகங்களை, ஊடகங்களில் அள்ளி இறைத்து நம்மை வறுத்தெடுக்கிறார்கள்இவர்களில் பெரும்பாலோர், திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பவர்கள்.

இவர்களில் யாரும். பதிப்பகம் ஏன் ஏற்கனவே இசைவளித்த திருமாவளவனை விட்டு விட்டு நிகழ்ச்சியை நடத்திட முடிவெடுத்தது? என்கிற கேள்வியை எழுப்பவில்லை. “விஜய் போதும்; திருமா தேவையில்லை என்கிற முடிவை பதிப்பகம் எப்படி எடுக்க முடிந்தது?அதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? என்று எவரும் அலசவில்லை” என தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!