கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை: நாடகமாடிய மனைவியை 4 மாதத்திற்கு பின்பு கைது

16 July 2021, 4:33 pm
Quick Share

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை செய்து நாடகமாடிய மனைவியை 4 மாதத்திற்கு பின்பு கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கே.குரும்பப் பட்டியை சேர்ந்த மொக்கராஜ் மகன் சென்றாயன். இவர் விவசாய பணி செய்து வந்தார். கடந்த 10.3.2021 அன்று அதிகாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் தனது மகன் சென்ராயன் தற்கொலை செய்து கொள்ளவில்லை சாவில் சந்தேகம் இருப்பதாக மொக்கராஜ் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையில் போலீசார் வத்தலக்குண்டு அருகே உள்ள வி. குரும்பபட்டியில் வசித்துவந்த சென்றாயன் மனைவி வனிதாவை அழைத்து விசாரணை செய்தனர்.

அப்போது போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் எனக்கும் கே .குரும்பப்பட்டியைச் சேர்ந்த அய்யனார் என்பவருக்கும் தொடர்பு இருந்தது. இதற்கு இடையூறாக எனது கணவர் இருந்ததால் நானும் அய்யனாரும் சேர்ந்து எனது கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடினேன் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வனிதாவை கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டு மேஜிஸ்ட்ரேட் மும்தாஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனைத் விசாரித்த மேஜிஸ்ட்ரேட் மும்தாஜ் 15 நாள் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார் இதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் வனிதா அடைக்கப்பட்டார்.

கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட அய்யனார் வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் அறிந்து அய்யனார் தலைமறைவாகி விட்டார். நிலக்கோட்டை போலீஸார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சென்றாயனுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளார்கள். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 231

0

0