கணவனை கூலிப்படை வைத்து கொலை… கள்ளக்காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய மனைவி ; விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
23 December 2022, 1:22 pm

நாமக்கல் ; கணவனை கூலிப்படையை வைத்து கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் தேவராஜ் (34).
திருச்செங்கோடு அப்பூர்பாளையத்திலிருந்து கைலாசம்பாளையம் செல்லும் ரோட்டில் ஜெகதாம்பாள் நகர் அருகே கடந்த 19ம் தேதி, தேவராஜ் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து 27 இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தேவாவின் மனைவி காயத்ரி என்கிற சரண்யா, சங்ககிரி பகுதியை சேர்ந்த தேவாவின் நண்பர் (கள்ளக்காதலன்) விமல்குமாருடன் (32) சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கொலை செய்தது தெரிய வந்தது.

கூலிப்படையை ஏற்பாடு செய்து கொடுத்த குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் (27) மற்றும் தேவாவின் மனைவி சரண்யா, கள்ள காதலன் விமல் குமார்(32) ஆகியோரை கைது செய்து ஊரக போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சங்ககிரி சேர்ந்த விமல் குமார் மற்றும் தேவராஜ் இருவரும் நண்பர்கள் என்பதும், இருவரும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விமல் குமாருக்கும், சரண்யாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எலக்ட்ரீசியன் தேவராஜனுக்கு 10 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து விசாரித்த திருச்செங்கோடு ஊரக காவல் ஆய்வாளர் பாரதி மோகன், போடப்பட்ட இன்சூரன்ஸ் பணத்தில் இருந்து 2 லட்சம் ரூபாய் கூலிப்படைக்கு கொடுப்பதாக விமல்குமார் உறுதி அளித்து இருந்ததும், இதனை அடுத்து விமல் குமாரின் நண்பர் கோபாலகிருஷ்ணன் சில ஆட்களை வைத்து தேவராஜை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

பின்னர், கூலிப்படையை வைத்து கொலை செய்தது, இன்சூரன்ஸ் தொகைக்காக கொலை செய்தது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறைக்கு மூவரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?