அந்நியச் செலாவணி முறைகேடு..! எம்பியின் சொத்துக்கள் முடக்கம்..! திமுகவின் தீராத தலைவலி..! தேர்தலில் எதிரொலிக்குமா..?

Author: Sekar
16 October 2020, 8:04 pm
Stalin_DMK_UpdateNews360
Quick Share

அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் திமுக எம்பியும், முன்னாள் தமிழக அமைச்சர் பொன்முடியின் மகனுமான கவுதம் சிகாமணியின் ரூ.8.60 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது. 

வழக்கின் பின்னணி :

திமுக மூத்த தலைவர் பொன்முடியின் மகனும் தற்போதைய கள்ளக்குறிச்சி எம்பியுமான கௌதம் சிகாமணி, கடந்த மார்ச் 2008’இல் ஜகார்த்தாவைச் சேர்ந்த பிடி எக்செல் மெகின்டோ நிறுவனத்தில் 2,45,000 பங்குகளை வாங்க 41,57,225 ரூபாயும், ஐக்கிய அரபு அமீரகத்தில் யுனிவெர்சல் பிசினஸ் வென்சுர்ஸ் நிறுவனத்தில் 22,86,924 ரூபாயும் முதலீடு செய்துள்ளார்.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (பெமா) கீழ், இந்த முதலீடுகளுக்கு ஆர்பிஐ ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி, எந்த ஆர்பிஐயிடம் எந்த ஒப்புதலும் இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் செய்த முதலீட்டின் மூலம் 2008-09 நிதியாண்டு முதல் 2012-13 வரையிலான காலகட்டத்தில் அவர் 7,05,57,237 ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். மேலும் யுனிவெர்சல் பிசினஸ் வென்சுர்ஸ்  நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 31.12.2012 கால கட்டத்தின் படி, நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 90,20,410 ரூபாய் தொகையை வைத்துள்ளார். 

ஆர்பிஐ ஒப்புதல் பெறாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த முதலீடுகள் மற்றும் அதன் மூலம் ஈட்டிய வருவாய் அனைத்தும் பெமா சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகும்.

அமலாக்கத்துறை விசாரணை : 

இந்த விவகாரம் அமலாக்கத்துறைக்கு தெரிய வந்ததை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

பெமா சட்டத்தின் 37ஏ பிரிவின் கீழ் ஆர்பிஐ ஒப்புதல் பெறாமல் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் சட்டவிரோதமாக கருதப்பட்டு, அவற்றிற்கு ஈடாக இந்தியாவில் முதலீட்டாளரின் சொத்துக்களை கைப்பற்ற அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு.

இந்நிலையில் கெளதம் சிகாமணியின் முறைகேடுகள் உறுதியானதை அடுத்து அமலாக்கத்துறை, கெளதம் சிகாமணிக்கு சொந்தமாக தமிழ்நாட்டில் உள்ள விவசாய நிலங்கள், தொழில் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற அசையா சொத்துக்களையும், வங்கி சேமிப்பில் உள்ள பணம் மற்றும் இதர முதலீடுகள் என மொத்தம் 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கைப்பற்றியுள்ளது.

திமுக தலைவர்களுக்கு அதிகரிக்கும் தலைவலி :

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முன்னர் ஜெகத்ரட்சகனின் சொத்துக்கள் முடக்கம், தற்போது கெளதம் சிகாமணியின் சொத்துக்கள் முடக்கம் என தொடர் தலைவலியை சந்தித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்திலும், 7 ஆண்டுகளாக மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையிலும், திமுகவினர் எம்பி என்ற போர்வையின் மூலமே இவ்வளவு சொத்துக்களை முறைகேடு செய்து வெளிநாடுகளில் பதுக்க முடிகிறது என்றால், ஆட்சிக்கு வந்தால் இன்னும் எவ்வளவு சொத்து சேர்ப்பார்களோ என மக்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்சம் நற்பெயரும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

இது வரும் தேர்தலில் எப்படியும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என துடிக்கும் திமுகவிற்கு பெரிய பின்னடைவாக மாறும் என கருதப்படுகிறது.

Views: - 67

0

0