தீபாவளிக்கு மறுநாள் லீவு..!பொதுமக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசின் சரவெடி அறிவிப்பு..?
Author: Vignesh20 அக்டோபர் 2022, 10:08 காலை
தீபாவளி பண்டிகை 24ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனால் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வர். பலர் உறவினர்களுடன் பண்டிகையை விமர்சையாக கொண்டாட திட்டமிடுவர். இதற்காக முன்கூட்டியே பயணங்களை முடிவு செய்வார்கள்.
தீபாவளி பண்டிகையானது இந்தஆண்டு திங்கட்கிழமை வருவதால், அதற்கு முன்னதாக வரும் சனி, ஞாயிறு ஆகியவை வழக்கமான விடுமுறையாக இருப்பதால், மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
வெள்ளிக்கிழமை இரவே அனைவரும் புறப்பட்டு விடுவர். இதனால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளிவந்து விட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி முடிந்த அன்றைய தினமே அவரவர் வசித்து வரும் ஊர்களுக்கு திரும்புவது சாத்தியமானது அல்ல. ஒட்டுமொத்த தமிழகமும் நெரிசலில் தள்ளாடி விடும். ஒருநாள் தள்ளி செவ்வாய் கிழமை அன்று புறப்படலாம் என திட்டமிடுவர். இவ்வாறு திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மக்கள் பிரிந்து புறப்பட்டு செல்வதால் நெரிசல் குறையும்.
தமிழகத்தின் சாலைகள் கொஞ்சம் மூச்சுவிட நேரம் கிடைக்கும். இருப்பினும் விடுப்பு எடுக்க வேண்டி வரும். அதுவே செவ்வாய் அன்று தமிழக அரசே விடுமுறை என்று அறிவித்துவிட்டால் யாரும் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியமில்லை. எப்படியும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏதாவதொரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்துவிடுவர்.
எனவே அக்டோபர் 25 செவ்வாய் கிழமை அன்று அரசு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கையும், எதிர்பார்ப்பும் பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்களின் எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. இதை வைத்தே பெற்றோர்களும் எப்போது திரும்பலாம் எனக் கணக்கு போடுவர்.
இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கையில், தீபாவளிக்கு அடுத்த நாள் 25ஆம் தேதி விடுமுறை விட அதிக வாய்ப்புள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. எனவே அதற்கேற்ப திட்டமிட பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் தயாராகத் தொடங்கிவிட்டனர்.
0
0