காதலனை கரம் பிடிப்பதற்காக போலி எஸ்ஐ ஆக கன்னியாகுமரியில் உலா வந்த பெண்ணை வடசேரி போலீசார் கைது செய்து உள்ளனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (46). இவர் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்பில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இதனை வெங்கடேசனின் மனைவி கவனித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் பியூட்டி பார்லருக்கு போலீஸ் சீருடையில் பெண் ஒருவர் வந்துள்ளார்.
அப்பெண் தன்னை வடசேரி உதவி ஆய்வாளர் எனக் கூறியுள்ளார். ஆனால், பியூட்டி பார்லரில் செய்து கொண்ட பேசியலுக்கு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். எனவே, இது குறித்து வெங்கடேசன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.
இதில், தேனி மாவட்டம் வடுகட்டியைச் சேர்ந்தவர் அபி பிரபா (34). இவருக்கு முதலில் முருகன் என்பவர் உடன் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால், கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிபிரபா அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் சென்னை தி.நகரில் உள்ள துணிக் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அப்போது அங்கு பணியாற்றிய சக ஊழியர் திருமணத்தில் பங்கேற்பதற்காக ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, ரயிலில் பயணம் மேற்கொண்ட நாகர்கோவில், பள்ளிவிளை பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபி பிரபா இளைஞரிடம் வற்புறுத்தி உள்ளார்.
ஆனால், தனது வீட்டில் போலீசாக இருப்பவரை மட்டுமே திருமணம் செய்து வைப்பார்கள் என அந்த இளைஞர் கூறியுள்ளார். எனவே, போலியாக போலீஸ் வேடமிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என அபி யோசனை கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞரும் சம்மதம் தெரிவித்து உள்ளார். எனவே, தனது நண்பர் ஒருவர் மூலம் போலீஸ் சீருடை பெற்று, போலி போலீஸ் ஐடி ஆகியவற்றுடன் கன்னியாகுமரியில் உலா வந்து உள்ளார்.
இதையும் படிங்க: மரத்தால் வந்த பிரச்னை.. அண்ணன் குடும்பத்தையே காலி செய்த தம்பி!
இதனிடையே, போலீஸ் போல் இருப்பதை புகைப்படங்கள் எடுத்து, இளைஞரின் பெற்றோரிடம் சம்மதமும் பெற்று உள்ளனர். இந்த நிலையில் தான் இலவசமாக பேஷியல் செய்து அபி பிரபா சிக்கியுள்ளார். இதனையடுத்து, அபி பிரபாவை கைது செய்த வடசேரி போலீசார், மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த நபர்கள் குறித்து விசாரணை செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.