ரூ.8000 பொருளுக்கு ரூ.5.46 லட்சத்தை இழந்த பெண்…ஆன்லைன் ஷாப்பிங்கால் வந்த வினை: மர்ம நபர்களுக்கு வலைவீசிய சைபர் கிரைம் போலீசார்..!!

Author: Rajesh
2 May 2022, 3:45 pm
Quick Share

திருச்சி: ஆன்லைனில் புக் செய்த ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள பொருளுக்கு முன்தொகை எனக்கூறி ரூ.5 லட்சம் பணத்தை சுருட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி அல்லிமல் தெருவைச் சேர்ந்தவர் திவாகர். இவருடைய மனைவி அனுஷ்கா. இவர் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய கணவர் திவாகருக்கு பிறந்த நாள் பரிசாக 8000 ரூபாய் மதிப்பிலான பொருள் ஒன்றை இணையதளம் மூலம் முன்பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்தவுடன் அடையாளம் தெரியாத அழைப்பில் இருந்து, அந்த நிறுவனத்தின் மேலாளர் பேசுவதாகக் கூறி ஒருவர் பேசியுள்ளார்.

அவர், பதிவு செய்திருக்கும் பொருளை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகளுடைய ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. அதற்கு பணக் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த பொருளை விநியோகம் செய்யும்போது பெறப்பட்ட பணத்தை திருப்பி தந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை நம்பிய அனுஷ்கா, அவர்கள் சொன்ன கணக்குக்கு ஐந்து லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.

அதன்பின் மர்ம எண்ணில் இருந்து வந்த என்னை அனுஷ்கா மீண்டும் தொடர்பு கொண்டபோது. இணைப்பு துண்டிக்கப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், அதுகுறித்து மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 782

0

0