இளம் விவசாயி மின்சாரம் பாய்ந்து பலி : மின்சார வாரியத்தை கண்டித்து போராட்டம்!!

20 September 2020, 3:44 pm
Kvp EB Dead - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே மின்சாரம் வாரியத்தின் அலட்சியம் காரணமாக இளம் விவசாயி உயிரிழந்ததால் மின்சார வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு காவல் எல்லைக்குட்பட்ட கிராமம் தலையால் நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த முண்டசாமி மகன் பாலமுருகன் (வயது 27).

விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் மகள் உள்ளார்.நேற்று காலையில் ஊருக்கு வெளியேயுள்ள தனது தோட்டத்திற்க்கு சென்று தண்ணீர் பாய்ச்சு கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்தார்.

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கயத்தார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு அனுமதித்தனர். ஆனால் பாலமுருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்தார். இதையடுத்து கயத்தார் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பாலமுருகன் உடல் தலையால் நடந்த குளத்திற்கு கொண்டுவரப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டார் போடும்போது மின்சாரம் தாக்கி பாலமுருகன் உயிரிழந்ததாக உறவினர்கள் கருதி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்திற்கு சென்றபோது, திடீரென மின்சாரம் தாக்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் பார்த்த போது அருகிலிருந்த கண்மாயில் இருக்கும் மின்கம்பங்களில் வயர்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மின்சார வயர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்த காரணத்தினால்தான் பாலமுருகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து விட்டதாகவும், ‌ இதற்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இன்று காலையில் அங்கு உள்ள கண்மாயில் மின்சார வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த பாலமுருகன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும், ‌ அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கயத்தார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், உயிரிழந்த பரமன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என்று போலீசார் உறுதியளித்தை போராட்டத்தை கைவிட்டனர். அக்கிராமத்தில் பல மின் கம்பங்கள் முற்றிலுமாக சேதமடைந்து விழும் நிலையில் இருப்பதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை தோண்டி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Views: - 11

0

0