வரதட்சணை கொடுமையால் இளம் பட்டதாரி பெண் தற்கொலை : இரண்டு பக்க கடிதம் சிக்கியது!!

2 February 2021, 9:56 am
Dowry Suicide - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தோட்டியோடு அருகே பட்டதாரி பெண் திருமணமான ஒன்றரை ஆண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறத்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியை அடுத்த விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் 22-வயதான ஜெனிஷா. பி.ஏ பட்டதாரியான இவருக்கும் வில்லுக்குறி மணக்காவிளை பகுதியை சேர்ந்த ரதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2019-ஆண்டு மே மாதம் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின் போது வரதட்சணையாக ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கமும் 20-சவரன் நகைகளும் பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். ஆனால் திருமணம் நடந்த சில நாட்களிலேயே ரதீஷ்குமார் மனைவி ஜெனிஷா வை குடிபோதையில் அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 30-ம் தேதி இரவு குடிபோதையில் வந்த ரதீஷ்குமார் மீண்டும் மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்த ஜெனிஷாவின் தாயார் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அன்றிலிருந்து மன அழுத்தத்தில் ஜெனிஷா இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை தாயார் வெளியே செல்ல வீட்டில் தனியாக இருந்த ஜெனிஷா சேலையால் வீட்டு உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து வீட்டிற்கு திரும்ப வந்த தாய் ஸ்ரீகுமாரி, மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு கதறி அழுத நிலையில் இது குறித்து அக்கம்பக்கத்தினர் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜெனிஷா தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்த இரண்டு பக்க கடிதத்தையும் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திருமணம் நடந்து ஒன்றரை வருடமே ஆன நிலையில் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 0

0

0