ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் பலி : அவனியாபுரத்தில் சோக சம்பவம்…!!

Author: Udhayakumar Raman
14 January 2022, 6:29 pm
Quick Share

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மீடுபிடி வீரர்கள் பிடித்து விதவிதமான பரிசுகளை வென்றனர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் இருக்கும் பகுதிக்குள் மாடுகள் சென்றுவிடாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்கப்பட்டன.

அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த 18 வயது இளைஞர் பாலமுருகன் என்பவர் மாடு முட்டியதில் பலத்த காயங்களுடன் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டார். வாடிவாசல் அருகே காளை வெளியேறுவதை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாலமுருகனை, அவரது இடது மார்பில் காளையின் கொம்பு குத்தி சீவியதாக கூறப்படுகிறது. இதனிடையே முதல் நாள் ஜல்லிக்கட்டிலேயே பரிதாபமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது ஜல்லிக்கட்டு விழாக் குழுவினருக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கிறது.

Views: - 209

0

0