நெருப்போடு விளையாடாதீங்க… விளைவு ரொம்ப மோசமா இருக்கும் : திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு வானதி சீனிவாசன் எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
7 July 2022, 1:18 pm

இந்தியாவின் ஒரு அங்குல நிலப்பரப்பை கூட, யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனித்தமிழ்நாடு என்று கேட்க வைத்து விடாதீர்கள் என்று திமுக எம்பி ஆ.ராசா அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வரும் அரசியல் கட்சியினர், முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக வாய் திறக்காதது ஏன்..? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

A Raja - Updatenews360

இந்த நிலையில், ஆ. ராசாவின் பேச்சை இந்திய அரசியல் சட்டத்தின்படி முதல்வராகி உள்ள ஸ்டாலின் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, “பிரிவினை வேண்டும். தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். சுதந்திர தமிழ்நாடுதான் நம்முடைய கடைசித் தீர்வு என்று பெரியார் சொன்னார். ஆனாலும், இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்றோம். முதல்வர் ஸ்டாலின் ‘அண்ணா’ வழியில் பயணம் செய்கிறார். எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள். தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்” என்று பேசியுள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான பேச்சு இது.

மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா எதையும் தெரியாமல் பேசக் கூடியவர் அல்ல. திமுக எப்போதுமே இந்தியா என்ற நாட்டின் ஒற்றுமைக்கு எதிராகவே பேசி வருகிறது. தனித் தமிழ்நாடு எந்நாளும் சாத்தியமற்ற ஒன்று என்பதை திமுகவினர் அறிவார்கள். அதனால்தான், தனித் தமிழ்நாடு கோரிக்கையை திமுக நிறுவனர் அண்ணாதுரை கைவிட்டார்.

Bjp Vanathi - Updatenews360

தமிழக இளைஞர்களின் மனதில், பிரிவினை எண்ணத்தையும், இந்திய நாட்டுக்கு எதிரான சிந்தனையையும் விதைக்க வேண்டும். அதன் மூலம் குளிர்காய வேண்டும் என்பதுதான் திமுகவின் திட்டம். அதற்காகவே, 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கத் தொடங்கினார்கள். அதன் வழியிலேயே, நாமக்கல்லில் ஆ.ராசா, தனி தமிழ்நாடு என பிரிவினைவாதம் பேசியிருக்கிறார்.

இந்தியாவின் ஒரு அங்குல நிலப்பரப்பை கூட, யாராலும் பிரிக்க முடியாது. தமிழகம் என்பது திமுக அல்ல. திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை திமுகவுக்கு வாக்களிப்பவர்களே ஏற்க மாட்டார்கள். தமிழகம் என்றுமே தேசியத்தின் பக்கம்தான். எனவே, நெருப்புடன் விளையாட வேண்டாம். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். ஆ.ராசாவின் பேச்சை, இந்திய அரசியல் சட்டத்தின்படி முதல்வராகி உள்ள ஸ்டாலின் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும், எனக் கூறியுள்ளார்.

  • sasikumar freedom movie postponed due to financial issues ஃப்ரீடம்க்கு Freedom இல்லையா? சசிகுமார் திரைப்படம் வெளியாகாததற்கு இதுதான் காரணமா?