நாளை முதல் ஆவின் பச்சை நிற பால் விற்பனை குறைப்பு.. ஆவின் நிர்வாகம் வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமா..? பால் முகவர்கள் சங்கம் கேள்வி

Author: Babu Lakshmanan
1 February 2024, 6:46 pm
Quick Share

இதே நிலை ஆவினில் தொடருமானால் 2024ம் ஆண்டு இறுதிக்குள் ஆவின் நிர்வாகம் படுவீழ்ச்சியை சந்திப்பது 100% உறுதி என்று தமிழ்நாடு பால் கொள்முதல் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதலில் கவனம் செலுத்தாததால் தொடர் வீழ்ச்சி ஒருபுறம், வடமாநிலங்களில் இருந்து பால் பவுடர் மற்றும் வெண்ணை வாங்கி பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்வதால் ஏற்படும் இழப்புகள் மறுபுறம், விற்பனை விலை குறைப்பு, கொள்முதல் விலை உயர்வு, ஊக்கத்தொகை வழங்கியும் விற்பனை விலையை உயர்த்தாததன் காரணமாக லிட்டருக்கு 9.00 ரூபாய்க்கு வருவாய் இழப்பு மற்றொருபுறம் என ஆவின் நிர்வாகம் முக்கோண சிக்கலில் சிக்கி தவித்து வருவதோடு, அடுத்தடுத்து என்ன செய்வது என தெரியாமல் 40 ஆண்டுகளுக்கு மேல் வணிக சந்தையில் உள்ள நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகள் உற்பத்தி மற்றும் விற்பனையை குறைப்பதிலும், முற்றிலுமாக நிறுத்துவதிலுமே கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் 90% மாவட்டங்களில் முழுமையாகவும், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 35% அளவிற்கும் ஏற்கனவே ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக அதே விற்பனை விலை கொண்ட, கொழுப்பு சத்து குறைவான டிலைட் பாலின் விற்பனையை முன்னிலைப்படுத்தி வருகிறது ஆவின் நிர்வாகம்.

இந்த நிலையில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மீண்டும் 10% பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி
ஆவின் நிர்வாகம் விற்பனையை குறைக்கும் நடவடிக்கையை மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து இன்று முதல் ஆவின் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதனால் நாளை முதல் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் (பச்சை நிற பால் பாக்கெட்டுகள்) பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதோடு, இந்த தட்டுப்பாட்டை எப்படி சமாளிப்பது என தெரியாமல் பால் முகவர்கள் விழி பிதுங்கி நிற்பதோடு, ஆவினை ஒட்டுமொத்தமாக இழுத்து மூடிவிட்டால் நாங்கள் நிம்மதியாக பால் விநியோகத்தில் ஈடுபடுவோம் என புலம்பி வருகிறார்கள்.

ஆனால் தமிழ்நாடு முதலமைச்சரோ, ஆவின் பாலின் விநியோகம் குறித்தும், அங்கே நிலவும் பிரச்சினைகள் குறித்தும் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமலும், ஆவின் மீது கவனம் செலுத்தாமலும் இருப்பதும், வரும் பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, ஆவினை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாக பயன்படுத்தி கொண்டு, ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி, பாலின் விற்பனை விலை மற்றும் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது.

ஆவினுக்கான பால் கொள்முதலில் கவனம் செலுத்தாதது, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்காதது, நுகர்வோருக்கான பால் விற்பனை விலையை வாக்கு வங்கி அரசியலை கணக்கில் கொண்டு உயர்த்தாமல் இருப்பது என இதே நிலை ஆவினில் தொடருமானால் 2024ம் ஆண்டு இறுதிக்குள் ஆவின் நிர்வாகம் படுவீழ்ச்சியை சந்திப்பது 100% உறுதி என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் இனியாவது விழித்துக் கொண்டு போர்க்கால அடிப்படையில் செயலாற்றுமாறு தமிழ்நாடு பால் கொள்முதல் சங்கம் வலியுறுத்துகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 345

0

0