கைவிட்ட பாஜக, கதறும் ஓபிஎஸ் : பாடம் புகட்டிய இடைத்தேர்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 8:36 pm
OPS - Updatenews360
Quick Share

ஊடக செய்தியாளர்களை சந்தித்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது பேட்டி அளிப்பது ஓ பன்னீர்செல்வத்தின் வழக்கம். சில நேரம் அது ஒரு மணி நேரம் நீளவும் செய்யும். இதனால் அவரை பேட்டி எடுக்கும் செய்தியாளர்கள் சலிப்படைந்து போய் விடுவதும் உண்டு.

ஊடகங்களை தவிர்க்காத ஓபிஎஸ்!

அதுவும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்த பிறகு, கட்சியில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக எங்கு சென்றாலும் அதை பரபரப்பு செய்தியாக ஊடகங்கள் வெளியிட்டதால் வழக்கத்தைவிட அவருடைய செய்தியாளர்கள் சந்திப்பு பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடிய நேரத்தில், அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தை தனது ஆதரவாளர்கள் புடை சூழச் சென்று அடித்து நொறுக்கி சூறையாடிய காட்சிகளை டிவி செய்தி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்த பின்பு அவருடைய நடவடிக்கைகளை வீர தீர சாகச செயல் என்று ஒரு சில ஊடகங்கள் போற்றி புகழ்ந்தால் அவர் செய்தியாளர்களையும் தவிர்ப்பதே இல்லை.

பதுங்கிய ஓபிஎஸ்

அதேநேரம் கடந்த இரண்டு நாட்களாக, அவர் செய்தியாளர்கள் சந்திப்பை தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

ஏன் இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்தது?… ஈவெரா திருமகன் இறந்து போகாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று ஓபிஎஸ் மனதுக்கு புலம்பும் அளவிற்கு ஆகிவிட்டதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கோர்ட் போட்ட உத்தரவு

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, “இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை உடனடியாக பொதுக்குழுவைக் கூட்டி அதன் உறுப்பினர்கள் மூலம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுத்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்து ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

பொதுக்குழுவை உடனடியாக கூட்ட நேரம் இல்லாமல் போனால் யார் வேட்பாளர் என்பதை உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியும் முடிவெடுக்கலாம்”
என்று உத்தரவிட்டனர்.

ஒரே வரியில் பதில்

இப்படியொரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளிக்கும் என்று ஓபிஎஸ் கனவிலும் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். அவருக்கு இதில் அதிர்ச்சியான இன்னொரு விஷயம் என்னவென்றால் பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேருக்கு மேல் இபிஎஸ்க்கு ஆதரவு இருப்பதால் நிச்சயம் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு வேட்பாளர் கே எஸ் தென்னரசுக்குத்தான் கிடைக்கும். நமது வேட்பாளர் செந்தில்முருகனின் தேர்தல் களம் அதோ கதி என்பதுதான்.

அதனால்தான் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு குறித்து, கடந்த 3ம் தேதி மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் “எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே” என்று ஒரே வரியில் பதில் கூறி அந்த இடத்தை விட்டு வேக வேகமாக நகர்ந்தும் விட்டார்.

பிதற்றிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

அதன் பிறகு அவருடைய அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர்தான் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேசினர். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு எங்களுக்கு சாதகமாகத்தான் வந்திருக்கிறது.

ஓ பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்களை பொதுக்குழுவில் கலந்து கொள்ளும்படி கூறி இருப்பதே எங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் பெருமைப்பட்டுக் கொண்டனர்.

வேகம் காட்டிய அவைத் தலைவர்

ஆனால் தமிழ் மகன் உசேன் மிகச் சாதுர்யமாக செயல்பட்டு விரைவு
தபால் மூலமாகவே பொதுக்குழு உறுப்பினர்களில் சுமார் 85 சதவீதம் பேரிடம் ஆதரவு கடிதத்தை பெற்று அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இது போன்ற விஷயங்களை செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் முன்பாக ஆவேசமாக பேசுவதுதான் ஓபிஎஸ்இன் வழக்கம்!

மாறாக, தனது மனக்குமுறலை நீண்ட அறிக்கையாகத்தான் அவரால் வெளியிட முடிந்தது. செய்தியாளர்கள் சந்திப்பை அவர் விரும்பவே இல்லை என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை

ஓபிஎஸ் வெளியிட்ட அந்த அறிக்கையில், “வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஒரு வேட்பாளரை அறிவித்து அவருக்காக பொது வாக்கெடுப்பு நடத்துவது சுப்ரீம் கோர்ட்டே எதிர்பார்க்காத ஒன்று என்றால் மிகையாகாது. இத்தகைய செயல் மூலம், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியது மட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் என்ற பதவியையும் அறவே புறக்கணித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி பிரிவினரின் முகவராகவே இயங்கி இருக்கிறார் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கருதுவதில் அர்த்தம் உண்டு”என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகன் வாபஸ் பெறுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது.

வாபஸ் வாங்கி ஓபிஎஸ் பல்டி

இந்த நிலையில்தான் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ் பெற்றுள்ளார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காக வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளோம். எங்கள் நோக்கம் இரட்டை இலை சின்னம் முடங்க கூடாது என்பதுதான். ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம்” என்றார்.

இப்படி ஓபிஎஸ் அந்தர் பல்டி அடிக்கும் நிலைமை எப்படி ஏற்பட்டது?… இதில் அரசியல் விமர்சகர்களின் பார்வை இதுதான்.

அரசியல் பார்வையாளர்கள் கருத்து

“2021 சட்டப்பேரவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற போதே கட்சி தனது கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்பது ஓபிஎஸ்க்கே நன்றாக தெரிந்து விட்டது. ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பேசு பொருளாக உருவானபோது அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை. ஓபிஎஸ் தனது பதவியை விட்டுக்கொடுக்க தயாராகவும் இல்லை. நமக்கு டெல்லி பாஜக தலைவர்களிடம் நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. அக்கட்சியிலிருந்து ஆலோசனை கூற சில ஆடிட்டர்களும் இருக்கிறார்கள். அவர்களை மீறி தனது பதவியை யாராலும் பறித்து விட முடியாது என்று ஓபிஎஸ் உறுதியாக நம்பினார்.

2017ல் அதிமுகவில் மீண்டும் இணைய பாஜக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போல நமக்கு இப்போதும் உதவி செய்வார்கள் என்றும் கருதினார். அதாவது இவர் அதிமுக தொண்டர்களையும், கட்சித் தலைவர்களையும் ஒருபோதும் நம்பியதில்லை. தவிர திமுகவை தாக்குவதிலும் அவருடைய வேகம் முன்பை விட பல மடங்கு குறைந்தும் விட்டது.

இதுதான் ஓபிஎஸ்சின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டே!

அதனால்தான் டிடிவி தினகரன், சசிகலா இருவரையும் டெல்லி பாஜக மேலிடம் அதிமுகவில் இணைக்க விரும்புகிறது என்று அவ்வப்போது சொல்வதை வழக்கமாக்கி கொண்டார்.

இபிஎஸ் பிளஸ் பாயிண்ட்

ஆனால் அவர்கள் அதிமுகவில் இருந்தபோது கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் என்ன பாடுபட்டனர் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு மிக நன்றாகவே தெரியும்.

அதுவும் டிடிவி தினகரன் 2017ல் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுகவின் விருப்பப்படி 2019 நாடாளுமன்றத் தேர்தல் வரை என்னென்ன சித்து விளையாட்டு வேலைகளில் ஈடுபட்டார் என்பதையும் இபிஎஸ் நன்றாக அறிவார். அதனால்தான் டிடிவி தினகரனும், சசிகலாவும் இனி அதிமுகவில் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என இன்று வரை அவர் உறுதியாக இருக்கிறார்.

அந்த வைராக்கிய குணம்தான், அதிமுக தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அத்தனை தரப்பினரிடமும் இபிஎஸ் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தி விட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா போல திமுக எதிர்ப்பில் எடப்பாடி பழனிசாமி மிகுந்த உறுதி காட்டுகிறார்.

இது அவருக்கு உள்ள மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.

ஓபிஎஸ் அரசியல் துறவறம்

அதே சமயம், ஓபிஎஸ் யாரை அதிகம் நம்பி இருந்தாரோ, அவர்களே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் இருந்து நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு கும்பிடு போட்டு முகத்தில் கரியையும் பூசி விட்டனர்.
இதனால் அப்செட் ஆகிவிட்ட ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தால் இது பற்றியெல்லாம் கேள்விகளை எழுப்பி நம்மை துளைத்து எடுத்து விடுவார்களே? என்று கருதி கூட அமைதியாகி இருக்கலாம்

எனவே அதிமுகவின் வளர்ச்சிக்கு உதவும் விதமாக ஓ பன்னீர்செல்வம் அரசியல் துறவறம் காண்பதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Views: - 275

0

0