அந்த 150 பேரில் நானும் ஒருவன்… என்னைப் பொறுத்தவரையில் இது ஆன்மீகம் ; சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி…!!

Author: Babu Lakshmanan
23 January 2024, 7:57 pm
Quick Share

அயோத்தி ராமர் கோவில் விழாவை நான் ஒரு ஆன்மீக நிகழ்வாகத்தான் பார்க்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டுள்ள துணியை அகற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வை பிரதமர் மோடி முன்னின்று நடத்தி வைத்தார். நகை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பால ராமருக்கு பிரதமர் மோடி விசேஷ பூஜைகளை செய்தார். பின்னர், பாதங்களில் தாமரை மலர்களை தூவியும் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தார்.

இந்த நிகழ்வில், ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப், கங்கனா ரணாவத் உள்ளிட்ட திரை பிரலபலங்கள் கலந்து கொண்டனர். அதேபோல, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஜடேஜா, கும்ப்ளே மற்றும் சாய்னா நேவால் போன்ற விளையாட்டு நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடித்து விட்டு, பால ராமரை தரிசித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ராமரை வழிபட்ட முதல் 150 பேரில் நானும் ஒருவன். அதில் எனக்கு மிகவும் சந்தோஷம். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன்.

ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன். அயோத்தி ராமர் கோவில் விழாவை நான் ஒரு ஆன்மீக நிகழ்வாகத்தான் பார்க்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் அனைவரின் பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ராமர் முகத்தை திறந்ததும் முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன், என்று தெரிவித்தார்.

Views: - 329

0

0