தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சி… திமுக தான் காரணம்… பெண்ணின் வயிற்றில் ஓசியாக பிறந்தவர் தான் அமைச்சர் பொன்முடி : போட்டு தாக்கிய நடிகை கஸ்தூரி!!

Author: Babu Lakshmanan
30 September 2022, 9:38 am

தஞ்சை : பேருந்துகளில் பெண்கள் ஓசி பயணம் மேற்கொள்வதாக கூறிய அமைச்சர் பொன்முடிக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்த நடிகை கஸ்துாரி, மாநகராட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகக் கூறி மேயர் ராமநாதன் மற்றும் ஆணையர் சரவணக்குமாரை சந்தித்து பாராட்டினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் பெண்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் நல்ல திட்டம். அரசு, எந்த திட்டத்தையும் அவர்களின் சொந்த பணத்தில் செய்யவில்லை. மக்களின் வரிப்பணத்தில் தான் நிறைவேற்றி வருகிறது. மக்களுக்கு ஒரு திட்டத்தைச் செய்து விட்டு, அதை சுட்டிக்காட்டுவது மிக பெரிய தவறு. ‘ஓசி பஸ்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது, அதை விட பெரிய தவறு.

அமைச்சர் பொன்முடி, அப்படி பேசியதை நியாயப்படுத்த முடியாது.’ஓசி பஸ்’ என பெண்களை கூறும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் முதல் அனைத்து ஆண்களும், பெண் வயிற்றில், ‘ஓசி’யில் பிறந்தவர்கள் தான். பெண்களுக்கான மரியாதையை அனைவரும் கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில் தான், அமைச்சர்கள் பேச வேண்டும்.

ஒரு செயலை எதிர்க்க எதிர்க்க அது வளரும் என்பார்கள். அப்படித்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தமிழகத்தில் திமுக எதிர்த்து எதிர்த்தே வளர்த்து விடுகிறது. ஆர்எஸ்எஸ் என்ற மூன்றெழுத்தை திமுக என்ற மூன்றெழுத்து தான் வளர்த்து வருகிறது. முதல்வர் முக ஸ்டாலின் மேயராக இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் தற்போது எதிர்பார்த்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் இல்லை. இருந்தாலும் பாராட்டும்படி அவர் செயல்படுகிறார், என தெரிவித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?