‘ஏய், நீ நிறுத்துடா’…. அதிமுக நிர்வாகியை ஒருமையில் திட்டிய அமைச்சர் சேகர் பாபு… திமுக – அதிமுகவினரிடையே மோதல்..!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 2:26 pm
Quick Share

வடசென்னை தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று பவுர்ணமி என்பதால், அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய போட்டி போட்டு வந்தனர்.

அதன்படி, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ராயபுரம் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வந்தனர். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோகர் வேட்பு மனு தாக்கல் செய்ய டோக்கன் வாங்கி காத்திருந்துள்ளனர்.

அப்போது, திடீரென உள்ளே வந்த திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அமைச்சர் சேகர், மேயர் பிரியா மற்றும் திமுகவினர் நேராக உள்ளே சென்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இருக்கையில் சென்று அமர்ந்தனர். இதனால், ஆத்திரமடைந்த
அதிமுகவினர், எங்களின் வேட்புமனுவைத் தான் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், திமுகவினர் மறுத்து எங்களின் வேட்புமனுவை தான் பெற வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அமைச்சர் சேகர்பாபு, அதிமுக நிர்வாகியை ‘ஏய் நிறுத்துடா’ என சத்தம் போட்டார். பதிலுக்கு அதிமுகவினரும் எகிறினர். இதனால், தேர்தல் அலுவலகத்தில் சலசலப்பு நிலவியது.

இதையடுத்து, கூச்சல், குழப்பத்திற்கு இடையே 5ம் எண் டோக்கன் வாங்கிய திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் மனைவி ஜெயந்தியிடம் மாற்று வேட்பாளருக்கான வேட்புமனு பெறப்பட்டது. பின்னர், அதிமுகவினரின் வேட்பு மனுவை பெற்ற பிறகு, திமுகவினரின் வேட்புமனு வாங்கப்பட்டது.

திமுகவினர் பினாமி டோக்கன் வாங்கி தங்களை காக்க வைத்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டியுள்ளார். இதனிடையே, நீண்ட நேரம் காத்திருப்பதாக பாஜக தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Views: - 100

0

0