ஜெ., பாணியில் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய EPS…! தேர்தலுக்காக புதுப் புது வியூகம்…?

Author: Babu Lakshmanan
2 October 2023, 8:13 pm
Quick Share

தமிழகத்தில் பிரதான எதிர்க் கட்சியாக திகழும் அதிமுகவுக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஒரு அக்னி பரீட்சையாக இருக்கும் என்று யார் நினைக்கிறார்களோ, இல்லையோ அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அப்படித்தான் நினைக்கிறார்.

1987ம் ஆண்டு இறுதியில் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டு பின்பு 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தனது வலிமையை நிரூபித்து கட்சியில் அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்தார்.

அதேபோல 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மிகவும் உறுதியாக இருந்து அதில் வெற்றியும் கண்டு கடுமையான போராட்டங்களுக்கு பின்பு அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

1999-ம் ஆண்டு மத்திய பாஜக அரசுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டு இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்து இறக்கும் வரை அதில் மிக உறுதியாகவும் இருந்தார். ஆனாலும் அவருடைய மறைவுக்கு பின்பு 2017-ம் ஆண்டு மத்திய பாஜக அரசின் ஆதரவை ஏற்றுக்கொண்டு பின்னர் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களை அதிமுக சந்திக்கவும் செய்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் பாஜகவின் கூட்டணியில் இருந்து அதிமுக நிரந்தரமாக விலகிக் கொண்டுள்ளது. இந்த முடிவையும் ஜெயலலிதா பாணியில் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரின் ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி எடுத்து அதிரடி காட்டியிருக்கிறார்.

இந்த இரு முக்கிய நிகழ்வுகளைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதா எடுத்தது போன்ற இன்னொரு முடிவையும் அவர் இப்போது முக்கிய துருப்பு சீட்டாக தன் கையில் அவர் எடுத்திருக்கிறார். தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் இன்று சமூக ஊடகங்கள் வழியாக அரசியல் செய்து வருவது வெளிப்படையாக தெரிகின்ற நிலையில் மக்களின் பிரச்சினைகளுக்காக மாவட்ட தலைநகரங்கள், முக்கிய சிறு நகரங்கள், தாலுகாக்கள் ஆகியவற்றில் பல்வேறு போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கத் தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் கடுமையான சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் அதிகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு போன்றவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தாலும் இனி நடப்பவை இன்னும் வீரியம் மிக்கதாக இருக்கவேண்டும், அதன் மூலம் ஆளும் திமுக அரசு செய்யும் தவறுகளை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்து ஆட்சியாளர்களை திணற வைக்க வேண்டும் என்கிற உத்வேகமும் இதில் தென்படுவதை பார்க்க முடிகிறது.

இதைத் தொடர்ந்தே திமுக அரசு, திருவண்ணாமலையில் அமையவிருக்கும் சிப்காட்டிற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 4ம் தேதி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை அதிமுக நடத்த முடிவு செய்துள்ளது.

அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளுக்கு எதிராக வருகிற 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படுகிறது.

மேலும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது 2 கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது அவர்களில் தகுதி பார்த்து ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டுமே ஸ்டாலின் அரசு வழங்குகிறது. இது திமுகவுக்கு வாக்களித்த பெண்களை ஏமாற்றும் செயல்.

எஞ்சிய ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், அதிமுக ஆட்சி காலத்தில் படிக்காத இள வயது பெண்களின் திருமணத்திற்காக 25 ஆயிரம் ரூபாயும் ஒரு பவுன் தங்கமும்
படித்த பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டதையும், தேர்தலின்போது திமுக அளித்த இன்னும் சில முக்கிய வாக்குறுதியான கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், வங்கிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் வாங்கிய கல்விக் கடன் அடியோடு ரத்து ஆகியவற்றை இந்த ஆர்ப்பாட்டங்களின்போது பொது மக்களிடையே தீவிர பிரசாரமாக கொண்டு செல்லவும் அதிமுக திட்டமிட்டு இருக்கிறது.

அதேபோல் திமுக அரசு அக்கறை காட்டாமல் புறக்கணித்து வருவதாக கூறப்படும் அம்மா உணவகங்களின் இன்றைய பரிதாப நிலை குறித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஒவ்வொரு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் குறிப்பிட்டு பேசவேண்டும் என அறிவுறுத்தப்பட்டும் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, டிடிவி தினகரனின் கட்சியில் எஞ்சியிருக்கும் ஒரு சில நிர்வாகிகளை தட்டித் தூக்கவும் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.

அது மட்டுமல்ல அண்மையில் அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோது ஏற்கனவே தினகரன் கட்சியில் இருந்து வெளியேறிய முக்கிய நிர்வாகிகளான எஸ்.டி.கே. ஜக்கையன்,சீனிவாசன், திருச்சி மனோகரன், கிருஷ்ணா ராதா, கோமல் அன்பரசன், திருப்பூர் சிவசாமி, இசக்கி சுப்பையா, அய்யாதுரை பாண்டியன், ஒரத்தநாடு சேகர் உள்ளிட்ட ஏரளாமானோருக்கு அதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பதவிகளையும் அளித்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எஞ்சிய அமமுக அதிருப்தி நிர்வாகிகளையும், ஓபிஎஸ் அணியில் உள்ள ஓரிரு முக்கிய பிரமுகர்களையும் அதிமுகவுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.

இப்படி ஒரே நேரத்தில் பல்வேறு புதிய வியூகங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

என்றபோதிலும்,” பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதால்தான் இது போன்ற கண்டன ஆர்ப்பாட்டங்களை மாநில முழுவதும் அதிமுக தீவிரமாக முன்னெடுக்கிறது என்று சிலர் கூறுவது ஏற்புடையது அல்ல” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஏனென்றால் திமுக ஆட்சியின்போது 2010ம் ஆண்டு தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை ஜெயலலிதா முன்னெடுத்தார். அது 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது. அதுபோலவே இப்போது எடப்பாடி பழனிசாமியும் கண்டன ஆர்ப்பாட்டங்களை மாநிலம் முழுவதும் நடத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை களைவதற்கு அதிமுக நேரடியாக களம் இறங்குவது பலன் அளிக்கவே செய்யும்.

அண்மையில் அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவு அணிக்கு ஏராளமான புதிய நிர்வாகிகளை நியமித்தும், அவர்களில் பலருக்கு பதவி உயர்வுகள் அளித்தும் இருப்பதன் மூலம் சமூக ஊடகங்கள் வழியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்ந்து உள்ளார்.

ஆனால் அது மட்டுமே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு கை கொடுத்து விடும் என்று
அவர் கருதவில்லை. ஏனென்றால் 2021 தேர்தலின்போது பெரும்பாலான நடுநிலை சமூக ஊடகங்கள் நடத்திய பல்வேறு கருத்துக்கணிப்புகளில், சீமான் கட்சிக்கு 90 லட்சம் முதல் 96 லட்சம் வாக்குகளும், நடிகர் கமல் கட்சிக்கு 66 லட்சத்திலிருந்து 72 லட்சம் ஓட்டுகளும், டிடிவி தினகரனுக்கு 46 லட்சம் 54 லட்சம் வாக்குகளும் கிடைத்தன. ஆனால் தேர்தலில் அது அப்படியே பலித்து விடவில்லை.

அதனால்தான் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்கி போராடுவதுதான் தேர்தலின்போது அதிமுகவுக்கு கூடுதல் வலிமை தரும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக நம்புகிறார். அதற்கான கட்டமைப்புகள் அதிமுகவில் வலுவாக இருப்பதால் கண்டன ஆர்ப்பாட்டங்களின் மூலம் மக்களை எளிதில் ஈர்த்து அதிமுக உயர் நிலைக்கு சென்று விடும் என்ற நம்பிக்கையும் அவரிடம் உள்ளது.

2017-ல் உங்கள் ஆட்சி கவிழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்டோம் என்று பாஜக தலைவர்களில் சிலர் கூறுகின்றனர். ஆனால் ஆட்சி கவிழ்ந்து அப்போது தேர்தல் நடந்திருந்தால் திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றி விடும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அதிமுக ஆட்சியை கவிழாமல் பாஜக பார்த்துக்கொண்டது. இதில் இருதரப்பினருமே வேறு வழியின்றி ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொண்டனர் என்பதுதான் உண்மை.

இப்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால் இதை அமித்ஷா சும்மா விட மாட்டார் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்றவற்றை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது ஏவி விடுவார். அதன் மூலம் அதிமுக துண்டு துண்டாக சிதறும் என்று சிலர் பேசத் தொடங்கியும் விட்டனர்.

இன்னும் ஒருபடி மேலே போய் அதிமுக எம்எல்ஏக்கள் 20 பேரை ஓபிஎஸ் தனது அணிக்கு இழுத்து இரட்டை இலையை முடக்கி விடுவார் என்றும் உரக்க குரல் எழுப்புகின்றனர். ஆனால் இதுபோன்ற சோதனைகள் நடந்தால் உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகதான், திமுகவுக்கு ஒரே மாற்று என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றும். ஏனென்றால் பலத்த சோதனைகள்தான் அரசியலில் சாதனைகளாக மாறும்.

அதேநேரம் பாஜகவின் அடிமை கட்சிதான் அதிமுக என்று திமுக தலைவர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் இனி அப்படியொரு விமர்சனத்தை வைக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டிருப்பதே எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த முதல் வெற்றி. அது தேர்தல் அரசியலிலும் அவருக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Views: - 285

0

0