அதிமுக மாஜி எம்எல்ஏக்கள், எம்பிக்களை கொத்தாக தூக்கிய அண்ணாமலை… பாஜகவில் இன்று ஐக்கியம்… அதிர்ச்சியில் இபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
7 February 2024, 9:42 am

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவை சார்ந்த 18 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக மாஜி எம்பியை பாஜக தனது கட்சிக்கு இழுத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தொகுதி பங்கீட்டில் ஒருவேளை உடன்பாடு ஏற்படாவிட்டால், கூட்டணி மாற்றம் ஏற்படும் நிலையும் உள்ளது.

அதேவேளையில், கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பாமக, தேமுதிகவிடம் தனித்தனியே ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக 12 தொகுதிகளையும், தேமுதிக 6 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டுள்ளது. இது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு தமிழக கூட்டணி தொடர்பாகவும், பிரதமர் மோடி வருகிற 25 ஆம் தேதி தமிழகம் வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

இதனிடையே, அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைய உள்ளனர். டெல்லியில் இன்று காலை நடக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவை சார்ந்த 18 முன்னாள் எம்எல்ஏக்கள், திமுகவை சார்ந்த ஒரு மாஜி எம்பியும் இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணையவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அண்ணாமலை இன்று மாலையே சென்னை திரும்பவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாஜி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?