திமுக எனும் கார்ப்பரேட் கம்பெனிக்கு மூடுவிழா… ஒப்புக் கொண்ட சேகர்பாபு : ஜெயக்குமார் கிண்டல்…!!

Author: Babu Lakshmanan
15 February 2022, 2:07 pm

சென்னை : திமுக என்னும் கார்ப்பரேட் கம்பெனிக்கு 2 ஆண்டுகளில் மூடுவிழா நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த தவறுகளை சுட்டிக்காட்டி திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. அதேவேளையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, வாக்குசேகரிக்கச் செல்லும் இடங்களில் திமுக தலைவர்களிடம், மகளிருக்கான ரூ.1,000 எப்போ கொடுப்பீங்க..? என பொதுமக்களே கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.

இது ஆளும் திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகளும் விமர்சிக்க தொடங்கியதால், விரைவில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கொண்டுவர வேண்டிய நெருக்கடி தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அவர் பேசியதாவது :- ஸ்டாலின் அவர்களை பொறுத்தவரையில் சினிமாவில் நடிகராக இருந்து வந்தவர்தான். அதனால் எதையும் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவராக அவர் இருந்து வருகிறார். அவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அதில் வரும் கதை வசனங்களை முழுமையாக மனப்பாடம் செய்து அதை ஒப்புவிப்பதில் வல்லவர். முழுமையாக மனப்பாடம் செய்து அதை சரியாக ஒப்புவிப்பவராகவே உள்ளார். யாரோ எழுதிக் கொடுத்ததை தான் வீடியோ கான்பரன்சில் படிக்கிறார். இது ஒருபுறம் இருந்தாலும், டுவிட்டரில் ஒரு தகவல் வந்தால் அதற்கு ஏதேதோ பதில் போடுகிறார். மேற்குவங்க ஆளுநரை பொருத்தவரையில் அம்மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்திருக்கிறார். ஆனால் அவர் முடக்கி விட்டதாக ஸ்டாலின் எதிர்வினையாற்றுகிறார்.

அவருக்கு கீழே உள்ள அதிகாரிகள் இதை எடுத்து சொல்லியிருக்க வேண்டாமா? எந்த அளவிற்கு தமிழ்நாட்டு முதல்வர் சிந்திக்க தெரியாதவராக இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியாத ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருப்பது கவலையடையளிக்கிறது. எது எப்படியோ இந்த ஆட்சியை பொருத்தவரையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூறியதுபோல கண்டிப்பாக வீட்டுக்கு போக வேண்டிய ஆட்சிதான். சட்டமன்ற தேர்தல்,பாராளுமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்ந்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் நாட்டில் அது போன்ற அறிகுறிகள் தென்படுகிறது. வன்முறை கலாச்சாரம், தீவிரவாதம் தொடர்கிறது. இவற்றையெல்லாம் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. எனவே நாட்டு மக்களுக்கு பொதுவான ஒரு அமைதி தேவைப்படுகிறது. நிச்சயமாக இரண்டு ஆண்டுகளுடன் திமுக என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு மூடுவிழா செய்யப்படும்.

அதை ஒப்புக் கொள்ளும் வகையில்தான் அமைச்சர் சேகர் பாபுவின் பதில்களும் உள்ளது. திமுகவின் ஆட்சியைக் கவிழ்த்தாலும் பரவாயில்லை, ஆனால் கலைத்தாலும் மீண்டும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என கூறுகிறார். அப்படி என்றால் அவர் திமுக ஆட்சியை கலைப்பது நல்லது என ஒப்புக்கொள்கிறார். அமைச்சராக இருப்பவர் ஆட்சியையெல்லாம் கலைக்க முடியாது, எது வேண்டுமானாலும் பேசலாமா என்றல்லவா கேட்டிருக்க வேண்டும், ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது அதனால்தான் அவர் ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என்று பேசுகிறார். மீண்டும் திமுக வரப்போவதில்லை, ஒருமுறை தமிழக மக்கள் ஏமாந்து விட்டார்கள், இனியும் திமுகவிடம் ஏமாற மாட்டார்கள். கடந்த 8 மாதங்களாக திமுக என்ன விதைத்ததோ அதுதான் விலையும். கடந்த 8 மாதமாக வன்முறை விதைக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதம் தலை தூக்கியிருக்கிறது. நிச்சயம் அதை திமுக அறுவடை செய்யும், எனவே வீட்டுக்கு போகும் நாள் விரைவில் வரும், எனக் கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?