ஓபிஎஸ்-ன் பொருளாளர் பதவி பறிப்பு…? அதிமுகவை முழுவதுமாக கைப்பற்றிய இபிஎஸ்.. கூடுதல் அதிகாரம் வழங்கி தீர்மானம்..!!

Author: Babu Lakshmanan
11 July 2022, 11:16 am
Quick Share

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விவாதத்தின் போது, ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் மாறிமாறி வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, 11ம் தேதி அதாவது, இன்று பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவித்தார்.

அதன்படி, காலை சரியாக 9 மணியளவில் நீதிபதி தீர்ப்பை வெளியிட்டார். அதில், அதிமுக பொதுக்குழுவை நடத்த எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்தார். மேலும், உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம்,விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

இந்த தீர்ப்பை அறிந்த உடன், வானகரத்தில் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அப்போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வழிமொழிந்தார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் உள்பட 16 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு; பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓபிஎஸ் வசம் இருந்த பொருளாளருக்கே உரிய வங்கி பரிவர்த்தனைகள் அதிகாரம் குறைக்கப்பட்டு பொதுச்செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் :

அதிமுகவின் நிர்வாக ரீதியிலான அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார்

தமிழகத்தில் உள்ள அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்

துணைப் பொதுச்செயலாளர்களையும், பொருளாளரையும் நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு

அவைத்தலைவர், பொருளாளர், தலைமை கழக நிர்வாகிகள் கொண்ட செயற்குழுவை பொதுச்செயலாளரால் மட்டுமே அமைக்க முடியும்

செயற்குழு – பொதுக்குழுவை கூட்டுதல், உட்கட்சி தேர்தலை நடத்துதல், வரவு – செலவு கணக்கை ஆராய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்

சட்டவிதிகளை மீறும் நிர்வாகிகளை நீக்குவதற்கோ, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம்

பொதுக்குழு – செயற்குழு கூடாத நேரங்களில் நிகழ்ச்சிகள், கொள்கை திட்டம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு

தேவையை பொறுத்து வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கவோ, கொடுக்கவோ பொதுச்செயலாளருக்கு அதிகாரம்

அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரும் படிவத்தில் கையெழுத்திட இபிஎஸ்க்கு அதிகாரம்

அதிமுகவின் பெண் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 441

0

0