அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரானார் இபிஎஸ்… 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்.. 4 மாதங்களில் நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல்…!!

Author: Babu Lakshmanan
11 July 2022, 10:53 am
Quick Share

சென்னை : அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விவாதத்தின் போது, ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் மாறிமாறி வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, 11ம் தேதி அதாவது, இன்று பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவித்தார்.

அதன்படி, காலை சரியாக 9 மணியளவில் நீதிபதி தீர்ப்பை வெளியிட்டார். அதில், அதிமுக பொதுக்குழுவை நடத்த எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்தார். மேலும், உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம்,விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

இந்த தீர்ப்பை அறிந்த உடன், வானகரத்தில் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அப்போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வழிமொழிந்தார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் உள்பட 16 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு; பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவின் 16 தீர்மானங்கள்

அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்

இரட்டை தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளர் பொறுப்பு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை நடைபெற உள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிட கோரும் தீர்மானம்

அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து கட்சி வளர்ச்சி குறித்து முடிவு எடுத்தல்

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் செயல்பட்ட அரசின் வரலாற்று வெற்றிகளுக்கும் பாராட்டு

அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம்

சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்

மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம்

இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம்

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்

நெசவாளர் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம், தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Views: - 467

0

0