“ஓபிஎஸ் கௌரவமாக விலகுவதே நல்லது”…!! “வெளியேறாவிட்டால் அவமானம்தான்”… பரிதாப நிலையில் ஓபிஎஸ்!!

Author: Babu Lakshmanan
25 June 2022, 4:47 pm
Quick Share

சென்னையில் கடந்த 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக அமைந்து இருந்தது என்றே சொல்லவேண்டும்.

சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இக்கூட்டம் நடந்தது.

இபிஎஸ்-க்கு மவுசு!!

இந்த பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்களில் 99 சதவீதம் பேர் “எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வலிவும், பொலிவும் பெற வேண்டும், எடப்பாடிதான் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக உரக்க குரல் கொடுக்க முடியும்” என்ற முழக்கங்களை காலை 10 மணி முதலே எழுப்பினர். கூட்டம் முடியும் நேரம் வரை அது நீடித்தது.

இக் கூட்டத்தில், அதிமுக பொருளாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டாலும் கூட, கடந்த ஓராண்டாக அவருடைய கருணைப் பார்வை திமுக, சசிகலா, டிடிவி தினகரன் பக்கம் திரும்பி விட்டதால் அவர் மீதான நம்பகத்தன்மை அடியோடு குறைந்துபோய் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளின் அடி மனதில் ஆழமாக பதிந்து இருப்பதால் அது கடும் கோபமாக பொங்கி கொப்பளித்ததையும் காணமுடிந்தது.

அதிமுகவின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து 2190 பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்திட்ட வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு “அடுத்த பொதுக்குழு கூட்டம் வரும் 11-ம் தேதி காலை நடைபெறும். அப்போது ஒற்றைக் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று அவர் அறிவித்தார்.

எழுச்சியும்… வீழ்ச்சியும்…

தமிழ்மகன் உசேன் இப்படி சொன்னதும், “வேண்டும், வேண்டும்! ஒற்றை தலைமை வேண்டும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆக வேண்டும்!” என்று அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஓபிஎஸ்சும் அவருடைய ஆதரவாளர் வைத்திலிங்கமும் அதிர்ச்சியடைந்து பொதுக் குழுவை புறக்கணிப்பதாக கூறி மேடையிலிருந்து இறங்கி வெளியே சென்று விட்டனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் கூட உறுப்பினர்கள் அனைவரும் எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் திறம் பட கட்டி காக்கப்பட்ட கட்சியை அழிப்பதற்காக ஓபிஎஸ் திரைமறைவில் தீவிரமாக செயல்படுகிறார் என்ற எண்ணம்தான் அவர் மீதான கோபத்திற்கு முக்கிய காரணம் என்பதை அரசியலில் ஆர்வம் கொண்டோர் அனைவரும் அறிவார்கள்.

இதை பிரதிபலிக்கும் விதமாகத்தான் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று வானகரம் பொதுக்குழு கூட்டம் தொடர்பான தலைப்பு செய்தியை முழுமையாக தொகுத்து வெளியிட்டு, அதன் இறுதியில் “மொத்தத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சியும், பன்னீர்செல்வத்தின் வீழ்ச்சியும் பட்டவர்த்தனமாக தெரிந்தது” என்று குறிப்பிட்டிருந்தது.

விலகுவதே நல்லது

இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து கௌரவமாக விலகிக்கொள்வதே நல்லது என்று அரசியல் சட்ட வல்லுனர்களும், அரசியல் விமர்சகர்களும் அறிவுரை கூறும் அளவிற்கு நிலைமை உருவாகிவிட்டது.

‘மரியாதையாக அனுப்பி வைக்கிறோம்…சென்று விடுங்கள்’ என ஓபிஎஸ்சுக்கு அதிமுக ‘ஐடி விங்’ அறிவுறுத்தியும் இருக்கிறது.

ஜூலை 11-ந் தேதி மீண்டும் கூடவிருக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகி விட்ட நிலையில் ஒ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே பலரும் கூறுகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக ஐடி விங் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Admk OPS EPS- Updatenews360

அதிமுக சென்னை மண்டல ஐடி பிரிவு செயலாளர் கோவை சத்யன் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு 10 மணியளவில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு கட்டிவிட்டதாக” கூறியிருந்தார்.

அதேபோல் அதிமுகவின் மதுரை மண்டல ஐடி பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், “தேதிகள் மாறலாம், தலைமை மாறாது. தலைமையை தேர்ந்தெடுப்பது, தொண்டர்களும், மக்கள் மன்றமும் மட்டுமே… கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் EPS 24×7 என்னும் புனை பெயரை சூட்டிக் கொண்டுள்ளவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக வரலாற்றில், பொதுக்குழு கூட்டத்தில் இப்படி அவமானப்பட்டு வெளியேறும் நபரை இதுவரை யாரும் கண்டதில்லை. முன்னாள் முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் இன்று சொந்த கட்சி பொதுக்குழு நபர்களால் துரோகி என்றும் கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்றும் கோஷம் போட்டு வெளியேற்றப்படும் அவமானம் மிகவும் கொடியது.

தன்வினை தானே தன்னை சுடும். இத்தனை எதிர்ப்புகள், அதிருப்தி, தொண்டர்களின் அவநம்பிக்கை அனைத்தையும் தாண்டி யாருக்காக எதற்காக இந்த பதவியை இறுக்க கட்டி பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும்? அப்படியே அந்த பதவி கிடைத்தாலும் வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும்? கட்சியின் தலைவனாக இருந்தாலும், தொண்டர்களின் தலைவனாக OPS இருக்க முடியுமா?

பன்னீர்செல்வம் இனியும் அவமானங்களையும் தொண்டர்களின் கோபத்தையும் சம்பாதிக்காமல் கட்சியில் இருந்து விலகி நிற்பது நல்லது. தனது அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு அமைதியாக வாழ்வை நகர்த்தலாம். கட்சி விசுவாசிகளையும், கட்சியையும் எதிர்த்து, தான் பெரியவன் என்று நிரூபிக்கும் போக்கை கைவிட வேண்டும். அப்படி நிரூபிக்க முயற்சித்து தோற்றவர்கள் ஏராளம். மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறோம். நிம்மதியாக செல்லுங்கள்” என்று அட்வைஸ் செய்துஉள்ளார்.

ரெண்டே வாய்ப்பு

“52 ஆண்டுகளாக அரசியலில் உள்ள ஓ பன்னீர்செல்வம் முதல்முறையாக மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து இருக்கிறார். இனியும் அவரால் அதிமுகவில் நிம்மதியாக பணியாற்ற முடியுமா? என்ற சூழலை அவரே ஏற்படுத்திக் கொண்டும் விட்டார்” என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“2017 பிப்ரவரி மாதம் சசிகலாவுக்கு எதிராக, ஜெயலலிதா சமாதி முன்பாக அமர்ந்து ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். ஆனால் இன்றோ அதே சசிகலா ஆலோசனையின்படி இயங்கி வருகிறார். அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்த்துக் கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம்
எடப்பாடி பழனிசாமி போல அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்ற உறுதியான பதிலை ஓபிஎஸ் தருவதில்லை.

மாறாக கட்சி இது குறித்து தீர்மானிக்கும் என்று தொடர்ந்து கூறி வந்ததால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் அவர் அறவே நம்பிக்கை இழந்து விட்டார். ஏனென்றால் சசிகலா குடும்பத்தினரால்தான் ஜெயலலிதா அவப்பெயரை பெற நேர்ந்தது என்ற எண்ணம் அதிமுக தொண்டர்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. அது ஓபிஎஸ்சுக்கும் நன்றாகவே தெரியும்.

OPS - Updatenews360

தவிர தனது மகன் ரவீந்திரநாத் முதலமைச்சர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்தித்ததையும், அவர் திமுக ஆட்சியை ரொம்பவே புகழ்ந்து பேசியதையும் ஓபிஎஸ் கண்டிக்கவில்லை. ஏனென்றால் இவரே கூட திமுக எதிர்ப்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காட்டிய தீவிரத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர்.

இத்தகைய சூழலில் கட்சியில் இரட்டைத் தலைமைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதால் ஓபிஎஸ் எதை சாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
கோர்ட் படிகளை ஏறினாலும் அவரால் கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பையும் மீறி சாதிக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். எனவே கட்சியில் அவர் மீதான வெறுப்பு, கோபம் தொண்டர்களிடம் உச்சத்தை எட்டுவதற்குள் அதிமுகவில் இருந்து அவர் கெளரவமாக விலகிக் கொள்வதே சிறந்த முடிவாக இருக்கும்.

அதன் பிறகு ஓபிஎஸ் சசிகலாவிடம் அடைக்கலம் புகுந்து தனது செல்வாக்கை நிரூபிக்கலாம். அல்லது டிடிவி தினகரன் கட்சியில் இணைந்து பணியாற்றலாம். இந்த இரண்டும்தான் தற்போது அவர் முன் உள்ள பிரகாசமான வாய்ப்புகள்” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் ஓ பன்னீர் செல்வத்துக்கு வழிகாட்டுகின்றனர்.

Views: - 589

0

0