கொலை பண்ணிடுவோம்-னு மிரட்டுறாங்க ; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது அதிமுக எம்எல்ஏ போலீஸில் பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 5:07 pm
Quick Share

தமிழக சட்டப்பேரவையில் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக எம்எல்ஏ போலீஸில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, அனைத்து கட்சிகளின் சார்பில் தலா ஒரு உறுப்பினரிடம், மசோதா குறித்து கருத்து கேட்கப்பட்டு வந்தது.

அப்போது, அதிமுக சார்பில் தாளவாய் சுந்தரம் ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கருத்துக்களை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, ஓபிஎஸ்ஸையும் பேச அனுமதித்தார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கும், ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அருண்குமார், கோவிந்தராஜ், அரக்கோணம் ரவி ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, சபையின் மரபை மீறி திட்டமிட்டே சபாநாயகர் செயல்பட்டதாக குற்றம்சாட்டினர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் என்கின்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் கருத்து கேட்டதாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 114

0

0