மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மதுவிலக்கு அமைச்சர்.. பாட்டிலுக்கு ரூ.10 கட்டாய வசூலை ஒப்புக் கொண்டாரா…? மீண்டும் ‘டாஸ்மாக்’ திகு திகு!

Author: Babu Lakshmanan
25 November 2023, 8:00 pm
Quick Share

மதுவிலக்கு துறை அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்ட பின்பு ஏற்கனவே அப்பதவியை வகித்த செந்தில் பாலாஜியை போல அவரும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

கடந்த ஜூலை மாதம் முத்துசாமி தெரிவித்த “காலையில் மது அருந்துபவர்களை குடிகாரன் என்று யாராவது சொன்னால், அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. காலையில் கடுமையான வேலைக்குச் செல்லக் கூடியவர்கள்தான் தவிர்க்க முடியாமல் இப்படி மது அருந்துகின்றனர்” என்று கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

மேலும் அப்போது டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்த இன்னொரு தகவலும் சமூக நல ஆர்வலர்களிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில்தான் மிக அண்மையில் வேலூரில் அமைச்சர் முத்துசாமியிடம் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக இன்றும் குற்றச்சாட்டு உள்ளதே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய
கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, “கூடுதல் விலையில் எங்கெங்கெல்லாம் மது விற்பனை செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் நடவடிக்கை எடுத்து அதை 99 சதவீதம் கட்டுப்படுத்தி விட்டோம். அதேபோல் அனுமதி பெறாமல் மதுபான பார்கள் நடத்தப்படுவதையும் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். மீறி எங்காவது சட்ட விரோதமாக பார் நடத்துவது பற்றிய புகார் வந்தால் அதன் மீதும் நடவடிக்கை எடுத்தும் வருகிறோம். தேர்தலில் வாக்குறுதி அளித்ததுபோல, படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடியும் வருகிறோம். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடி இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இதில் இரண்டு விஷயங்களை உண்மை என்று அமைச்சர் முத்துசாமி ஒப்புக் கொண்டு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

ஏனென்றால் செந்தில் பாலாஜி மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்தபோதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் அவர் செய்தியாளர்களிடம் கோபத்துடன் “பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுதை நீங்கள் தமிழகத்தில் எல்லா டாஸ்மாக் கடைகளுக்கும் சென்று பார்த்தீர்களா?… ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் நடப்பதை வைத்துக் கொண்டு நீங்கள் கேள்வி கேட்பது சரியல்ல. புகார் வந்த மதுபான கடைகளின் விற்பனையாளர்கள்
மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் உள்ளது” என்றுதான் பொங்கி எழுந்தாரே தவிர அமைச்சர் முத்துசாமி சொல்வது போல 99 சதவீதம் கட்டுப்படுத்தி விட்டோம் என்று சொல்லவில்லை.

அதேபோல உரிமம் பெறாத மது பார்கள் நடத்தப்படுவது பற்றி அப்போது மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை. ஆனால் அமைச்சர் முத்துசாமி அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.

இது ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் திமுக அரசுக்கு தலைவலி தருவதுபோல மதுபானம் விநியோகம் தொடர்பாக வெளியிட்ட அரசாணையும் சிக்கலை உருவாக்கி விட்டிருக்கிறது.

சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாற அனுமதி வழங்கி தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வக்கீல் பாலு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா பூர்வாலா, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நவம்பர் 24ம் தேதி நடந்தது.

அப்போது நீதிபதிகள், “மதுவிலக்கு சட்டப்பிரிவு 4 ஏயின் படி போதையில் பொது இடத்தில் நடந்து சென்றாலே குற்றம். அப்படி இருக்கும்போது விளையாட்டு மைதானம் என்பது பொது இடம் என்னும் பட்டியலுக்குள் வருகிறது. அங்கு எப்படி மதுபானங்களை பரிமாற அனுமதி வழங்குவீர்கள்?.. அதுவும் சர்வதேச நிகழ்வுகள் என்று கூறப்பட்டு இருக்கிறது.

ஒரு அரசியல் கட்சி சர்வதேச கருத்தரங்கை நடத்தும் போதும், சர்வதேச இசை நிகழ்ச்சிகளை நடத்தும்போது இது போல மதுபானங்களை பரிமாறினால் என்னவாகும்?… இது போன்ற பின் விளைவுகளை ஆராயாமல் அரசாணையை பிறப்பிக்கலாமா? விளையாட்டை பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கும்போது மது பாட்டில்களையும் அன்பளிப்பாக வழங்குவீர்களா?… ஒட்டுமொத்த மைதானத்தில் ஒரு இடத்தை மட்டும் குடிப்பதற்கென எப்படி ஒதுக்குவீர்கள்? என்று சரமாரியாக கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பி அதிர்ச்சியும் அளித்தனர்.

அது மட்டுமல்லாமல் “ஒவ்வொரு மாநிலமும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். ஆனால் தமிழகத்தில் அரசு மதுபானம் விற்பனை செய்கிறது. மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாயும் கிடைக்கிறது” என்று இன்னொரு கருத்தையும் நீதிபதிகள் தெரிவித்து அரசு சார்பில் ஆஜரான வக்கீலை திணறடித்தனர்.

அதற்கு தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் “மது விற்பனை என்பது அரசின் கொள்கை முடிவு” என்று கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து சர்வதேச நிகழ்வுகளின்போது மதுபானத்தை எப்படி விநியோகம் செய்வீர்கள்? என்பது பற்றி விரிவான விளக்கம் அளிக்கும்படி கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தமிழக அரசின் இந்த புதிய அரசாணை சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் சமூகநல ஆர்வலர்களின் பார்வையோ இதில் வேறு மாதிரியாக உள்ளது.

“டாஸ்மாக்கால் வருவாய் இல்லை, நஷ்டம்தான் ஏற்படுகிறது என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் திமுக அரசு, அதன் விற்பனையைப் பெருக்க பல்வேறு நூதன வழிகளை கையாள்வது ஏன் என்பதுதான் புரியவில்லை “என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

“இத்தனைக்கும் நடப்பு நிதி ஆண்டில் தமிழக அரசின் வருவாய் ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் குறைந்தபட்சம் 18 சதவீத வருவாய் கிடைக்கிறது. மதுபானங்களை கொள்முதல் செய்வது, அவற்றை வாகனங்களில் ஏற்றி, இறக்குவது ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவினங்கள் போக தமிழக அரசுக்கு எப்படியும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் கோடி ரூபாயாவது லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் இல்லை என்று எப்படி தமிழக அரசு கூறுகிறது என்பதுதான் புரியவில்லை. அது தொடர்ந்து நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது என்று கூறுவதை நம்புவதற்கு கடினமாகவும் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில்தான் இயங்குகிறது என்றால் டாஸ்மாக்கை எதற்காக நடத்த வேண்டும்? இழுத்து மூடி விட்டு போகலாமே என்ற கேள்வியும் எழுகிறது.

அதேநேரம் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப் படுவதை 99 சதவீதம் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என்று கூறுவதன் மூலம் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படி கட்டாய வசூல் வேட்டை நடத்தப் பட்டு இருக்கிறது என்பதை அமைச்சர் ஒப்புக் கொள்வது போலவே உள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இதனால் முறைகேடான வழியில் பணத்தை சம்பாதிப்பதற்காகத் தான் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கினாலும், அதை தமிழக அரசு தொடர்ந்து நடத்த விரும்புகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

அதேபோல ஏப்ரல் மாதத்துக்கு பின்பு 500 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என்று அமைச்சர் முத்துசாமி கூறுகிறார். ஆனால் இன்னும் பல இடங்களில் எங்கள் பகுதியில் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுங்கள் என்று பெண்கள் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதனால் மூடப்பட்ட 500 கடைகளும் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் எவை எவை என்பதை மாநில அரசு சாமானிய மக்களுக்கும் தெரியும்படி நாளிதழ்களில் வெளியிடவேண்டும். ஏற்கனவே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைப் பற்றி தெரிவிக்காவிட்டாலும் கூட அடுத்து மூடப் போகும் 500 கடைகள் பற்றிய முழு விவரங்களையும் ஊடகங்கள் வாயிலாக அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக தமிழக அரசு முழுமையாக வெளியிடவேண்டும். இல்லையென்றால் அமைச்சர் கூறுவதெல்லாம், வெறும் வாய்ஜாலம் என்றுதான் பெண்கள் கருதுவார்கள். ஏனென்றால் டாஸ்மாக் மதுக்கடைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுவும் நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது!

Views: - 210

0

0