அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தாலும், சேர்ந்தாலும் பாதிப்பு இல்லை.. வெற்றி பெறுவது திமுகதான் : அடித்து சொல்லும் உதயநிதி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2023, 9:58 am
Udhaya - Updatenews360
Quick Share

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தாலும், சேர்ந்தாலும் பாதிப்பு இல்லை.. வெற்றி பெறுவது திமுகதான் : அடித்து சொல்லும் உதயநிதி!!

கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர் தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் காலங்களில் மட்டும் தான் மாநாடு நடத்துவது வழக்கம் அப்படி தான் தற்போது திமுக இளைஞரணி மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆனால் இம்முறை இளைஞர் அணி மாநாடு நடத்த தலைவர் அனுமதி வழங்கி உள்ளார்.

சேலம் இளைஞர் அணி மாநாடு வெற்றி பெற அனைவரும் பெரும் திரளாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டும், நமது தலைவர் அரசியலில் படிப்படியாக உயர்ந்து, இளைஞர் அணி அமைப்பாளர், மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர், பதவிகளில் இருந்து மிசா காலங்களில் சிறை தண்டனை பெற்று படிப்படியாக உயர்ந்தவர்.

அப்படி திமுகவில் உழைக்கும் அனைவருக்கும் நிச்சயம் வெற்றி பெறலாம், திமுகவில் முதன்மை அணியாக இளைஞர் அணி உள்ளது. யாராக இருந்தாலும் கடுமையாக உழைத்தால் திமுகவில் முன்னேறலாம்.

நாம் திமுக இளைஞரணி மாநாடு நடத்துகிறோம், அண்மையில் மதுரையில் அதிமுக மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் என்ன முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த நாள் நாளிதழில் பார்த்தால் மாநாட்டில் புளி சாதமும், சாம்பார் சாதமும், நன்றாக இருந்ததா? என்பது தான் இடம் பெற்றிருந்தது.

ஆனால் திமுக மாநாடு வெற்றி மாநாடாக அமைய வேண்டும், மதுரை அதிமுக மாநாடு நடந்தபோது, அதே நாளில் திமுக சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி இளைஞரணி சார்பில் போராட்டம் நடந்தது.

நான் பலமுறை கேட்டேன் அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினேன். ஆனால் அதிமுகவினர் நீட் தேர்வுக்கு எதிரான எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை,

இன்றைக்கு திமுக அரசின் திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் திமுக அரசை விமர்சனம் செய்கிறார்.

நான் பிரதமர் மோடியை கேட்கிறேன் அனைவரின் வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என சொன்னார் செய்தாரா? பிரதமர் மோடி சொன்னதை ஒன்றே மட்டும் தான் செய்துள்ளார், ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்துள்ளார், இந்தியா என்பதை பாரத் என தற்போது பெயர் மாற்றம் செய்துள்ளார்.

இன்றைக்கு சிஏஜி அறிக்கையில் மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகிறது. இறந்தவர்களின் பெயரில் காப்பீடு திட்டத்தில் முறைகேடாக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் பயன் பெற்றது அதானி குடும்பம் மட்டுமே.

அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து உள்ளார். அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் சரி, வைக்காவிட்டாலும் சரி, தேர்தல்களில் திமுக தான் வெற்றி பெறப் போகிறது.

மக்களை ஏமாற்ற முடியாது அதிமுகவின் தலைவர்கள் மீதும், அமைச்சர்கள் மீதும், பல்வேறு இ.டி. வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. அதனால் தற்போது கூட்டணி இல்லை என்பார்கள், பிறகு தேர்தல் நேரத்தில் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள், எனவே தமிழகத்தில் அதிமுக என்கிற இயக்கத்தை கட்சியை முழுமையாக அகற்ற இளைஞர்கள் ஒன்று திரண்டு வரவேண்டும் என பேசினார்.

இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் மதியழகன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 205

0

0