திமுக அரசுக்கு எதிராக மதுரையில் ஒன்று திரளும் அதிமுக… முக்கிய அசைன்மென்ட்டை அறிவித்த எடப்பாடி பழனிசாமி!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2023, 1:52 pm
edapp
Quick Share

திமுக அரசுக்கு எதிராக மதுரையில் ஒன்று திரளும் அதிமுக… முக்கிய அசைன்மென்ட்டை அறிவித்த எடப்பாடி பழனிசாமி!!!

முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக.

தற்போது மக்களுக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் தொல்லை கொடுக்க முடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் பல்வேறு இன்னல்களைத் தந்து மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக, விடியா திமுக ஆட்சியின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களையும், மக்களைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த அளவிற்கு விடியா திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை தலைவிரித்து ஆடுகிறது. இதன் காரணமாக மக்கள் வாழ வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

குறிப்பாக, விவசாயப் பெருங்குடி மக்கள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் தேவையான தண்ணீரை அணைகளில் இருந்து குறித்த காலத்தில் திறந்துவிடுவதற்கு விடியா திமுக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், விவசாயிகள் பெரும் துயரத்தில் வாடுகின்றனர். கழக ஆட்சிக் காலங்களில், மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் ஒருபோக விவசாயம் செய்து பயனடைந்து வந்தனர்.

ஆனால், தற்போது முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், மேலூர் தொகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஒருபோக விவசாயம் செய்வதற்கு விடியா திமுக அரசு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிடவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், விடியா திமுக அரசிடமும் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், தங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் பெரிதும் ஆதங்கப்படுகின்றனர்.

குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது.

இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வெகு விரைவில் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிலையில், முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து, மதுரை மாவட்டம், மேலூர் தொகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாத விடியா திமுக அரசைக் கண்டித்தும்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 15.12.2023 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், மேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. V.V. ராஜன் செல்லப்பா, M.L.A., அவர்கள் தலைமையிலும்; மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் திரு. P. பெரியபுள்ளான் (எ) செல்வம், M.L.A., அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும்; மக்கள் விரோத விடியா திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெருத்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Views: - 206

0

0