தமிழகத்தில் மது விற்பனை நேரம் மாற்றம்? தமிழக அரசுக்கு அறிவுரைகளை கூறி நீதிமன்றம் பரிந்துரை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 9:15 pm
Tamsac Time - Updatenews360
Quick Share

தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மதுபான விற்பனை செய்வதை தடுக்க கோரிய வழக்கில், பொது மக்களின் நலன் கருதி டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என நேரத்தை மாற்றியமைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும். மதுபான கடைகள் மற்றும் மது அருந்தும் விடுதிகளில் மதுவினால் ஏற்படும் விளைவுகள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விலை பட்டியல்கள் தமிழில் அச்சடிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் மற்றும் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மதுபானம் வாங்க விற்க உபயோகப்படுத்த உரிமம் உள்வர்களுக்கு மட்டுமே என விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மது விற்பனை விலைப்பட்டியல் மற்றும் மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகளை குறித்து அனைத்தும் தமிழில் அச்சிட வேண்டும். மதுபான கடைகளில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்.” என உத்தரவிட்டனர்.

முக்கியமாக மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Views: - 343

0

0