பிடிவாதம் வேண்டாம்… பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்க ; திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்..!!!

Author: Babu Lakshmanan
24 April 2024, 5:01 pm
Quick Share

தொல்லியல் துறை ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஆணை என்றும், வழக்கில் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா? என்பதைக் கண்டறிய தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது. பெருவெளிப் பகுதியின் புனிதமும், தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக அவருக்கு பன்னாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம் காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார். வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: ஓபிசி, எஸ்சி/எஸ்டி மக்களின் எதிர்பார்ப்பு… இண்டியா கூட்டணி ஆட்சியமைந்தவுடன் நிறைவேற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது. பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 99

0

0

Leave a Reply