மீம்ஸ் போட்டதுக்கு எல்லாம் கைதா..? இதுதான் பாசிசத்தின் உண்மையான முகம் ; முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
22 March 2023, 1:10 pm
Annamalai Vs Stalin - Updatenews360
Quick Share

தமிழக பட்ஜெட்டை சமூகவலைதளத்தில் விமர்சித்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியானது. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் முதல் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனங்களை எழச் செய்துள்ளது.

அதாவது, தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்குவதாக சொல்லிவிட்டு, தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு எனக் கூறுவதா..? என்று திமுக அரசுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை எப்படி தேர்வு செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பி, மீம்ஸ்களையும், டிரால்களையும் நெட்டிசன்கள் செய்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை டிரால் செய்து @voiceofsavukku என்ற பெயரில் டுவிட்டர் கணக்கை நடத்தி வரும் சவுக்கு சங்கரின் ஆதரவாளர் பிரதீப் என்பவர் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதனால், திமுகவினர் கொதித்து போகினர்.

மேலும், மதுரை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த வாய்ஸ் ஆஃப் சவுக்கு பக்கத்தின் அட்மின்களில் ஒருவரான பிரதீப் சென்னை போலீசாரால் நேற்று இரவு 11.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி கொடுத்த புகாரின் பேரில் பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்த பதிவில், “இந்த கைதுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மற்றும் சென்னை காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், தனது பற்றாக்குறையான பட்ஜெட்டை யாரும் விமர்சிக்க கூடாது என்று அவர் நினைப்பதாகவும் கூறி விமர்சனம் செய்துள்ளார். இதற்கு அமைச்சரும் பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், பட்ஜெட்டை விமர்சித்ததற்காக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வலுத்து வருகின்றன. அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதாவது, சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்தவரை கைது செய்து சர்வாதிகாரப் போக்கை திமுக அரசு வெளிப்படுத்தியுள்ளது ; ஒரு குடும்பத்தின் கையில் அதிகாரம் இருந்தால் இதுதான் நிலை. சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து கருத்து பதிவிடுவது குற்றம் என்றால், திமுகவின் ஐடி விங் முழுநேர வேலையே இதுவாகத்தான் இருக்கிறது. கருத்து சுதந்திரத்தை பறிப்பது, நள்ளிரவில் கைது செய்வது, எந்த சாதனையும் இல்லாமல் வெறும் சுய விளம்பரம் போன்றவை பாசிசவாதியின் உண்மையான குணம், முதலமைச்சர் ஸ்டாலின்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, சமூகவலைதளங்களில் பிரதீப் கைதுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கைது நடவடிக்கையை எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அந்த டிரால் வீடியோவை பகிர்ந்து, ArrestMetoo_stalin என்னும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 109

0

0