அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் இவரா..? அமைச்சரின் வாரிசை ஓரங்கட்டிய பிரமுகர்…!!

Author: Babu Lakshmanan
13 February 2024, 11:38 am

திமுக வெற்றிக்கு மிகவும் சவாலாக இருக்கும் ஒரு தொகுதியாக “வேலூர்” பார்க்கப்படுகிறது. அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளையில், தற்போதைய எம்பியின் மீது மக்கள் மத்தியில் மட்டுமின்றி சொந்தக் கட்சியினர் இடையேயே அதிருப்தி நிலவுவதால் ஆளும்கட்சிக்கு வேலூரில் வெற்றி கேள்விக்குறியாக உள்ளது. இது பல்வேறு ஊடகங்களின் சர்வேக்கள் மூலம் வெளிப்படையாக தெரிந்தது.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு வலுவான போட்டியாளராக அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகனை வேலூரில் போட்டியிடச் செய்யலாம் என்பது திமுக தலைமையின் திட்டமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரில் ஜெகத்ரட்சகனை போட்டியிடச் செய்தால், அரக்கோணத்தில் அடுத்த திமுக வேட்பாளர் என்ற கேள்வியும், விவாதமும் எழத் தொடங்கியுள்ளது.

இப்படியிருக்கையில், அரக்கோணம் தொகுதியின் வேட்பாளராக திமுகவின் அடுத்த தேர்வு ஆற்காடு ஏவி சாரதியாக இருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.

ஏவி சாரதி பொதுவாகவே வியாபாரத்தில் மிகவும் நேர்த்தியாகவும், நுணுக்கமாகவும், சாதுரியமாகவும், பல அணுகுமுறைகளை கடைப்பிடித்து தனது சொந்த உழைப்பிலேயே மிக சிறிய இடத்தில் இருந்து மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி அமைத்தவர் என்று தெரிகிறது.

அதேபோல, கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், இவர் பொறுப்பேற்ற பிறகு ஆற்காடு நகராட்சியில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 23 வார்டுல திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது கூறப்படுகிறது.

மேலும், அமலாக்கத்துறையின் சோதனைகளில் தன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து காட்டியது திமுகவின் தலைமையை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், கொரோனா நோய் தாக்கிய சமயத்தில் தொடங்கி, தற்போது வரை பல்வேறு நல திட்ட உதவிகளை பொதுமக்களுக்காக செய்து வருவதால், கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் மிகவும் நேசிக்கும் நபராக இருக்கிறார்.

அதேவேளையில், தனது தந்தையின் கைத்தறித்துறையில் கைவரிசை காட்டி பணம் சம்பாரிப்பதாகக் குற்றம்சாட்டப்படும் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தியும் அரக்கோணம் தொகுதிக்கான வேட்பாளர் ரேஸில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டியை பருத்தி மூலம் தயாரித்து கொடுக்க வேண்டும் என்று இருக்கையில், விலை குறைவான பாலீஸ்டரைப் பயன்படுத்தி வேட்டிகளை தயாரித்து கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் காந்தியின் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த முறைகேட்டில் அமைச்சரின் மகன் வினோத் காந்தியின் தலையீடு தான் அதிகம் இருப்பதாகவும், இதன்மூலம், அமைச்சரின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தலைமைக்கு நெருக்கமான ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், தனக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று அமைச்சர் உதயநிதியிடம் நேரடியாக புலம்பியதாகவும், அரசு அதிகாரிகளை கட்டுக்குள் வைத்துக் கொண்டு அடவாடித் தனம் செய்வதாக தலைமைக்கே புகார் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாரை திமுக வேட்பாளராக அறிவிக்கப்போகிறது என்பது அரக்கோணம் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் மனநிலையாக உள்ளது. கமிஷன் காந்தி என அண்ணாமலை பேசும் அளவுக்கு மகனின் செயல்பாடுகள் இருப்பதால், வினோத் காந்திக்கு சீட் வழங்குவது கொஞ்சம் கடினம் என்றே கூறப்படுகிறது.

அதேபோல, அரக்கோணத்தில் வன்னியர் சமூகத்தினர் அதிகம் இருப்பதால், திமுகவுக்கு அந்த சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்கும் என்று தெரிகிறது. எனவே, ஆற்காடு ஏவி சாரதியைத் தான் அரக்கோணம் வேட்பாளராக திமுக அறிவிக்கும் என்று பெரும்பாலான பேச்சுக்கள் எழுகின்றன.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!