இது பழைய பாஜக அல்ல… எங்களை அடித்தால் திருப்பி அடிப்பேன் : திமுகவில் இருப்பவர்கள் கோழைகள்… அண்ணாமலை சரவெடி..!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 2:38 pm

ஆவினில் ஒவ்வொரு பாக்கெட்டுக்கும் ரூ.10 முதல் 12 வரை கொள்ளையடிக்கப்படுவதாகவும், பெரும்பான்மையாக இருப்பதால் அரசு கொண்டுவரும் எல்லா மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க தேவையில்லை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் யங் இந்தியன் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பின்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, “திமுக கட்சியில் கோழைகள் மட்டுமே உள்ளனர். பிரதமர் குறித்த டுவிட்டை அழித்து விட்டு ஓடியவர் மனோ தங்கராஜ். தமிழ்நாட்டு அரசியலில் அடிப்படையில் ஒரு நாகரீகம் தேவை.

திமுகவினர் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். காமராஜரை அவதூறு மூலம் தான் தோற்கடித்தனர். ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் 10 முதல் 12 ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர். தனியார் பால் கம்பெனிகளுக்கும், ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு. மனோ தங்கராஜ் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன, அவர் ஐடி துறையில் இருந்த போது, அவர் செய்த ஊழலை ஆளுநரிடம் கொடுத்து உள்ளோம்.

நாங்கள் மக்களுக்காக அரசியல் செய்கிறோம். எனவே, அது காரசாரமாக தான் இருக்கும். மரியாதை கொடுத்தால் நாங்களும் மரியாதை கொடுப்போம். இது பழைய பாஜக அல்ல. நானும் பழைய பாஜககாரன் அல்ல, என்றார்.

இரண்டாவது முறை அனுப்பிய மசோதாக்களையும் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, “பொய் சொல்வதில் கில்லாடி அமைச்சர் ரகுபதி. ஆன்லைன் ரம்மி சட்டம் பிழையானது என தெரிந்தும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். பொய்யான மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் உடனே கையெழுத்து போடவில்லை என்றால், தமிழக அரசு நிர்வாகமே முடங்கி விடுமா? ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்கள் எவற்றால் அரசின் நிர்வாகம் முடங்கி விடும் என சொல்லுங்கள். மசோதாவை சரியாக வடிவமைக்க முடியவில்லை. பெரும்பான்மை இருப்பதால் எந்த மசோதாவை வேண்டுமானாலும் கொண்டு வருவோம் என்றால், அதை அனைத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை, என்றார்.

கோவில் சொத்துக்களை பாஜகவினர் சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “திமுக பலமுறை ஆட்சியில் இருந்தும் திருடு போன 13 சிலைகளை மட்டுமே மீட்டுள்ளனர். பாஜகவினர் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்து உள்ளார்கள் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். நானே வரவேற்கிறேன். 3% மட்டுமே பாஜகவினருக்கு சம்பந்தம் உள்ளது. மீதமுள்ள 97% குற்றச்சாட்டு திமுகவினர் உடையது.

முதலமைச்சர் நடைபயிற்சி செல்கையில் ஒரே பிராமண தாத்தா மட்டுமே தினமும் வாழ்த்து சொல்கிறார். பிராமணர் வாழ்த்தை பெற்று ஆட்சியை விளம்பரப்படுத்த முயல்கிறார் முதலமைச்சர். ஆயிரம் குடமுழுக்கு நடைபெற்றதற்கும், திமுகவுக்கும் என்ன தொடர்பு? கோவில் உண்டியலில் வரும் பணத்தை வைத்து அதே கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தி மக்களை முட்டாளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

கோவில் பணத்தை முழுவதுமாக அந்த கோவிலை ஒட்டியுள்ள மக்கள் பயன்படும் வகையில் தான் செலவிட வேண்டும். கோவில் பணத்தில் அதிகாரிகளுக்கு அலுவலகம், கார் வாங்குவது அறநிலையத்துறை சட்டத்திலேயே கிடையாது, என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர்,”வெற்றி, தோல்வியை சரியாக கையாள நம் நாட்டுக்கு மனப்பக்குவம் வர வேண்டும். கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும். பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு 6 கிலோ எடை குறைந்துள்ளேன்,” என கூறினார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!