‘நீங்க கால்சட்டை போடுறதுக்கு முன்பே எல்லாம் பாத்தவன்… அவசரப்பட்டுட்டீங்களே தம்பி’ ; அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி..!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 4:28 pm
Quick Share

உங்களின் மான நஷ்ட வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நிகழ்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அண்மையில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பாலின் விற்பனையை நிறுத்தி விட்டு, கொழுப்புச்சத்து குறைவாக உள்ள பாலின் விலையை அதிகரித்து விற்பதாக, சில ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜும் சளிக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார்.

இப்படியிருக்கையில், குஜராத்தின் அமுல் நிறுவனத்திற்காக தமிழகத்தின் ஆவின் நிறுவனத்தை அண்ணாமலை அழிக்க பார்ப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு உடனே ரியாக்ஷன் கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X தளப்பக்கத்தில், “கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ், நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். ஏற்கனவே, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு,” எனக் கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்தப் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் மனோ தங்கராஜ் X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதாவது, “தம்பி அண்ணாமலை, தாங்கள் கால்ச்சட்டை போடுவதற்கு முன்பே (1988) பேச்சிப்பாறை நீர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், கனிம வள பாதுகாப்பு போராட்டம் என எத்தனையோ மக்கள் பிரச்சனைகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் நான் ஏறி இறங்கிய வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தம்பியின் மான நஷ்ட வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்? ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ?,” என தெரிவித்துள்ளார்.

Views: - 160

0

0