ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்?… ஆதரவாளர்கள் தந்த திடீர் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2024, 7:07 pm
OPS
Quick Share

ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்?… ஆதரவாளர்கள் தந்த திடீர் ஷாக்!

தனது அரசியல் எதிர்காலத்தை ராமநாதபுரம் தொகுதியில் பணயம் வைத்துள்ள முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு திடீர் ஷாக் அளிக்கும் விதமாக அவருடைய ஆதரவாளர்களே இனி உங்களை நம்பி எதுவும் ஆகப் போவதில்லை எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து உறுதியாக அரசியல் நடத்தும் தைரியத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் என்று போர்க்கொடி உயர்த்தி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை கைப்பற்றுவதற்காக பல்வேறு தருணங்களில் கூறிய யோசனைகளை ஓ பன்னீர்செல்வம் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை என்பதால் அவர்களிடம் நீண்ட காலமாக இருந்த இந்த மன வருத்தம் தற்போது எரிமலையாக வெடித்து இருக்கிறது.

மேலும் படிக்க: ஓடும் ரயிலில் பணியில் இருந்த இளம்பெண் ஊழியருக்கு கத்திக்குத்து : கைப் பையை பறித்து ஓடிய மர்ம நபர்கள்.!!

இத்தனைக்கும் டெல்லி பாஜக மேலிடம் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே ஓ பன்னீர்செல்வத்துக்கு வெளிப்படையாக தனது ஆதரவை அளித்து வருகிறது. ஆனாலும் கூட அதை சரியான முறையில் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற மனக்குமுறல்தான் அவருடைய ஆதரவாளர்களிடம் இருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய போதே ஓ பன்னீர்செல்வம் தனது பிடியை இறுக்கிக் கொண்டிருக்கவேண்டும். பாஜக தலைமையிடம் குறைந்தபட்சம் 14 தொகுதிகளை கேட்டு வாங்கி அதில் டிடிவி தினகரனுக்கு 5 இடங்களை கொடுத்துவிட்டு மத்திய, தென் மாவட்டங்களில் போட்டியிட்டு நமது பலத்தை நிரூபித்துக் காட்டி இருக்க வேண்டும். இத்தனைக்கும் முதலில் தமிழக பாஜக தலைமை ஓ பன்னீர்செல்வத்துக்கும், டிடிவி தினகரனுக்கும் சேர்த்து 14 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முன் வரத்தான் செய்தது.

ஆனால் அதை ஓ பன்னீர் செல்வம்தான் ஏற்கவில்லை. எனக்கு மட்டும் ஒரேயொரு தொகுதி கொடுத்தால் போதும் என்று அமைதியாக இருந்து விட்டார். அல்லது தேனி தொகுதியை எனது மகன் ரவீந்திரநாத்துக்கு ஒதுக்குங்கள் என்று நிபந்தனை விதித்தார். தவிர 9 தொகுதிகளில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் போதுமான பண வசதியில்லை என மறுத்தும் விட்டார். இதனால் அவருடைய ஆதரவாளர்கள் பலருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விருப்பம் இருந்தும் கூட அதை அவர் ஏற்படுத்தித் தரவில்லை. இதன் காரணமாகவே டிடிவி தினகரனுக்கும் எதிர்பார்த்த அளவில் தொகுதிகள் கிடைக்காமல் போனது.

அதேநேரம் தங்களைவிட குறைவான வாக்கு வங்கியை கொண்ட ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் நான்கு தொகுதிகளை ஒதுக்கி தருமாறு பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து மூன்று எம்பி சீட்டுகளை வாங்கிவிட்டது என்ற ஆதங்கமும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் காணப்படுகிறது.

இதனால் இரண்டு பக்கமும் ஓ பன்னீர்செல்வம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டார் என்ற கோபமும் வைத்திலிங்கம், கு பா கிருஷ்ணன் போன்ற அவருடைய தீவிர ஆதரவாளர்களிடம் இன்றளவும் உண்டு.

இதற்கு முக்கிய காரணம் 9 தொகுதிகளில் போட்டியிட்டு, இரட்டை இலை சின்னத்துக்கு பன்னீர்செல்வமும், ‘பி பார்ம்’ அளிக்கும் பட்சத்தில், ஏற்கனவே 35 தொகுதிகளுக்கு எடப்பாடி பழனிசாமியும் பி பார்ம் அளித்து இருந்தாலும் கூட தேர்தல் ஆணையம் குழப்பத்தில், இருவருக்கும் இரட்டை இலை சின்னத்தை தராமல் முடக்கி விடும் என்ற திட்டத்தை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போட்டு வைத்திருந்தனர்.

மேலும் படிக்க: 5 நாட்கள் ஓய்வு.. குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வந்த CM ஸ்டாலின் : போலீசார் கட்டுப்பாட்டில் நட்சத்திர விடுதி!

இதில் ஓ பன்னீர்செல்வத்தின் விசுவாசியான பெங்களூரு புகழேந்தி எடுத்துக் கொண்ட அளவிற்கு ஓபிஎஸ் தீவிர கவனம் செலுத்தவில்லை. ஏனென்றால் அவர்தான் தேர்தல், அரசியல் கட்சிகள் தொடர்பான சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையம் என கடைசி வரை முட்டி மோதியவர்.

இதனால்தான் இரட்டை இலையை முடக்கும் வாய்ப்பு இருந்தும் கூட அது நடக்காமல் போய்விட்டது. தலைமை தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது அங்கீகரிக்கப்பட்டு இருப்பதால் அவருடைய தலைமையிலான கட்சிக்குத்தான் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுகிறது என்று திட்டவட்டமாக அறிவித்தும் விட்டது.

இந்த நிலையில்தான் பெயர் குறிப்பிட விரும்பாத ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களில் சிலர் மனம் விட்டு பேசிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அவர்கள் கூறுவதாக சொல்லப்படுவது இதுதான்.

“2022 ஜூலை 11ம் தேதி போட்டி பொதுக்குழுவை நடத்தும்படி கூறினோம். அதை ஓ பன்னீர்செல்வம் கேட்கவில்லை. மாறாக அன்று தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடியது, அதிமுக தொண்டர்களிடம் அவர் மீது கடும் கோபத்தையே ஏற்படுத்தியது. இன்று வரை அது தணியவில்லை.

ராமநாதபுரம் தொகுதியை பாஜக ஒதுக்கிய மறு நாளே, தனக்கு நெருக்கமான ஒரு குழுவினரோடு மட்டும் அந்த தொகுதிக்கு சென்ற ஓ பன்னீர்செல்வம், தன் குழுவில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் 80 பேர் மற்றும் மாநில நிர்வாகிகளை, தேர்தல் பணியாற்ற ராமநாதபுரம் வரும்படி அழைக்கவே இல்லை.

தாமாக முன் வந்த பலருக்கும், பணிகளை ஒதுக்கிக் கொடுக்காமல் அலட்சியப்படுத்தியதால், வந்த ஒரு சிலரும் நமக்கென்ன என்று, ஓரிரு நாட்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.

பன்னீர்செல்வத்தின் ஆலோசகர் போல செயல்படும் வைத்திலிங்கம் கூட, ராமநாதபுரத்துக்கு தேர்தல் பணிக்காக வந்து, முழுமையாக பணியாற்றாமல் மீண்டும் ஒரத்தநாட்டுக்கு கிளம்பிவிட்டார். திரும்ப அவர் வரவே இல்லை.

இதனால் வேறு வழியின்றி தனது உறவுக்காரர்கள்,ஓரிரு கட்சிக்காரர்களை வைத்து, சுயேச்சை சின்னமான பலாப்பழத்தை தொகுதி முழுக்க பன்னீர்செல்வம் கொண்டு சென்றார். அவருக்கு முக்குலத்தோர் ஓட்டுகள் முழுமையாக கிடைத்தாலும், அது மட்டும் வெற்றிக்கு போதுமானதாக இருக்குமா? என்று தெரியவில்லை.

தேர்தல் பிரசாரம் முடிந்ததும், வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட பரிசு பொருட்கள் ராமநாதபுரம் கொண்டு வரப்பட்டன. ஆனால், தொகுதி முழுக்க அந்த பொருட்கள் போய் சேரவில்லை. அதை வினியோகிக்க ஆங்காங்கே நியமிக்கப்பட்ட முகவர்களே, பரிசு பொருட்களை அபகரித்துக் கொண்டனரே தவிர, வாக்காளர்களிடம் கொண்டுபோய் சேர்க்கவில்லை.

இதற்கிடையே உச்ச நீதிமன்றம் அறிவித்த பின்பும், தேர்தல் ஆணையத்தை அணுகி இரட்டை இலையை கேட்டு விண்ணப்பம் கொடுக்கலாம் என்ற திட்டத்தையும், தன்னை சார்ந்தவர்களை செய்ய விடாமல் பன்னீர்செல்வம் தடுத்து விட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமியோடு முழு வலிமையுடன் பன்னீர்செல்வம் மோதவில்லை என்ற எண்ணம், எங்கள் ஆதரவு தலைவர்களிடம் எழுந்துள்ளது.

தேர்தலுக்கு பின், இது எப்படி செல்லும் என புரியாததால், அவரை நம்பி தொடர்ந்து பயணிக்க அத்தனை பேரும் தயங்குகிறோம். ஏனென்றால் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவை கைப்பற்றுவதை மறந்து விட்டு
தனது இரு மகன்களுடனும் பாஜகவுடன் இணைந்து விடுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் அதிமுக தலைவர்களை ஒருங்கிணைத்து, அவருக்கு
எதிராக போராட நாங்கள் முடிவெடுத்து இருக்கிறோம்.

இதற்காக, பெங்களூரு புகழேந்தி தலைமையில் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் அடிக்கடி சந்தித்து பேசி, திட்டம் வகுக்கின்றனர். வைத்திலிங்கமும் விரைவில் எங்கள் பக்கம் வந்து விடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின்பு நாங்கள் தனித்து செயல்பட முடிவெடுத்து உள்ளோம்” என்று அந்த ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

என்னது?…தர்ம யுத்தம் நடத்திய ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக அவருடைய ஆதரவாளர்களே தர்ம யுத்தமா?… நல்ல வேடிக்கைதான்.

Views: - 177

0

0