தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம் பேருக்கே வேலை தரல… இதுல 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பா..? திமுகவுக்கு அண்ணாமலை கண்டனம்.!!

Author: Babu Lakshmanan
20 September 2023, 2:40 pm
Annamalai STalin - Updatenews360
Quick Share

மின்சார வாரியத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கே பணி நியமனம் செய்யாமல், ஐந்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினரை வஞ்சித்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்குத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 5,336 தேர்வாளர்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணி வழங்காமல் வஞ்சித்து வருகிறது திமுக அரசு. கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 21 ஆம் தேதி, அன்றைய மின்சாரத் துறை அமைச்சராக இருந்த திரு செந்தில் பாலாஜி அவர்கள், விடுபட்ட தேர்வாளர்களுக்குப் பணி நியமனம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும், பணி நியமனம் செய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால், விரக்தி அடைந்துள்ள தேர்வாளர்கள் இன்று, கொளத்தூரில் உள்ள தமிழக முதலமைச்சரின் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். அரசுப் பணிக்காகத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றும், பணி நியமனத்துக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்து, வேறு வழியின்றிப் போராட்டம் நடத்தும் அவலநிலைக்கு இளைஞர்களைத் தள்ளியிருக்கும் ஊழல் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 187ஐ, முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அரசுப் பணிகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இரண்டு வருடங்களாகியும், மின்சார வாரியத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கே பணி நியமனம் செய்யாமல், ஐந்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினரை வஞ்சித்து வருகிறீர்கள். இந்தப் போக்கை உடனடியாக நிறுத்திக் கொண்டு, கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கும் உடனடியாகப் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 114

0

0