ஆரத்தி எடுத்தவருக்கு தட்டுக்கடியில் பணம்… வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ ; விசாரணைக்கு தேர்தல் அதிகாரி உத்தரவு

Author: Babu Lakshmanan
29 March 2024, 6:36 pm

கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியின் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிட்டுள்ளார். கோவையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, 40 தொகுதிகளிலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், பிரச்சாரத்தின் போது அண்ணாமலையை பெண் ஒருவர் ஆரத்தி எடுத்து வரவேற்றார். அப்போது, தட்டுக்கு அடியில் பணத்தை வைத்து அண்ணாமலை கொடுப்பது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற விபரம் தெரியாத நிலையில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிராந்திகுமார், இது தொடர்பாக பதிலளித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் இந்த வீடியோவை குறிப்பிட்ட தேர்தல் அதிகாரி கிராந்திகுமார், இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை அண்ணாமலை பணம் கொடுத்தது உறுதியானால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை என்றும், தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?