வேண்டப்பட்ட ரியல்‌ எஸ்டேட்‌ நிறுவனங்களுக்கு மட்டுமே செயல்படுகிறதா திமுக அரசு? அண்ணாமலை சந்தேகம்!!

Author: Babu Lakshmanan
14 May 2024, 1:29 pm
Quick Share

திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல்‌ எஸ்டேட்‌ மற்றும்‌ கட்டுமான நிறுவனங்களின்‌ வளர்ச்சிக்கும்‌ வருமானத்துக்குமானதாகத்‌ தெரிகிறதே அன்றி, பொதுமக்களுக்கு ஏற்படும்‌ பாதிப்பு குறித்து திமுகவுக்கு எந்த அக்கறையும்‌ இல்லை என்பது தெளிவாகத்‌ தெரிவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஆட்சிக்கு வந்ததில்‌ இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில்‌ மாதம்‌ ஒரு முறை, தமிழக மக்களின்‌ மீது ஏதோ ஒரு வகையில்‌ கட்டண உயர்வைச்‌ சுமத்தி வரும்‌ திமுக அரசு, தற்போது பத்திரப்பதிவு கட்டணத்தையும்‌ பல மடங்கு உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது. மே 8, 2024 தேதியிட்ட அரசாணையின்படி, ரூ.5 ஆக இருந்த கட்டணம்‌, ரூ. 500/- ஆகவும்‌, ரூ.30 ஆக இருந்த கட்டணம்‌, ரூ.1,000/- ஆகவும்‌ என, 26 வகையான சேவைகளுக்கான பத்திரப்‌ பதிவு கட்டண உயர்வைச்‌, சற்றும்‌ ஏற்றுக்‌ கொள்ள முடியாத அளவுக்குப்‌ பல மடங்கு உயர்த்தியிருக்கிறது திமுக அரசு.

மேலும் படிக்க: தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு. ஆஜரான இபிஎஸ் : நீதிமன்றம் போட்ட உத்தரவு!

ஏற்கனவே, கடந்த 2023 ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ மாதம்‌ முதல்‌, வழிகாட்டி மதிப்பை சுமார்‌ 50% வரை உயர்த்தி வசூலிக்கத்‌ தொடங்கிய திமுக அரசின்‌ செயல்பாடு சட்ட விரோதமானது என்று, மாண்புமிகு சென்னை உயர்ந்திமன்றம்‌ தீர்ப்பளித்த பின்னரும்‌, தீர்ப்பை மதிக்காமல்‌, உயர்‌ நீதிமன்றத்தை அவமதிக்கும்‌ விதமாகத்‌ தொடர்ந்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தையே வசூலித்து வந்தது.

இதனை எதிர்த்து, கடந்த 2023 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ 14 அன்றும்‌, இந்த ஆண்டு ஜனவரி 17 அன்றும்‌, தமிழக பாஜக சார்பில்‌ கண்டனத்தைப்‌ பதிவு செய்திருந்தோம்‌. இதனை அடுத்து, இந்த ஆண்டு மார்ச்‌ 6 அன்று, சென்னை உயர்நீதிமன்றம்‌, 2017 ஆம்‌ ஆண்டு வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும்‌ என்று உத்தரவிட்டும்‌, திமுக அரசு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவைக்‌ கண்டு கொள்ளாமல்‌, உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின்‌ அடிப்படையிலான கட்டணத்தையே வசூலித்து வருகிறது.

தற்போது, பத்திரப்பதிவு கட்டணத்தையும்‌ பல மடங்கு உயர்த்தியிருப்பதன்‌ மூலம்‌, சாதாரண பொதுமக்கள்‌ மீதான கட்டணச்‌ சுமையை பல மடங்கு அதிகமாக்கியுள்ளது. தற்போது, வழிகாட்டி மதிப்பை மீண்டும்‌ உயர்த்த, திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத்‌ தெரிகிறது. இதன்படி, சில இடங்களில்‌ 33% வழிகாட்டி மதிப்பு உயர்வும்‌, சில்‌ இடங்களில்‌ 50% உயர்வும்‌, மேலும்‌ சில இடங்களில்‌ 100% வரை வழிகாட்டி மதிப்பை உயர்த்த, திமுக அரசு நடவடிக்கைகள்‌ மேற்கொண்டு வருவதாகத்‌ தெரிகிறது.

பத்திரப்பதிவு கட்டணத்தையும்‌ உயர்த்தி, வழிகாட்டி மதிப்பையும்‌ உயர்த்தி, மாண்புமிகு உயர்நீதிமன்றத்‌ தீர்ப்பையே மதிக்காமல்‌ செயல்படும்‌ திமுக அரசு, இத்தனை அதிகமான கட்டணச்‌ சுமையை பொதுமக்கள்‌ மீது திணிப்பதன்‌ பின்னணி, திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல்‌ எஸ்டேட்‌ மற்றும்‌ கட்டுமான நிறுவனங்களின்‌ வளர்ச்சிக்கும்‌ வருமானத்துக்குமானதாகத்‌ தெரிகிறதே அன்றி, பொதுமக்களுக்கு ஏற்படும்‌ பாதிப்பு குறித்து திமுகவுக்கு எந்த அக்கறையும்‌ இல்லை என்பது தெளிவாகத்‌ தெரிகிறது.

ஆட்சி நடத்துவது பொதுமக்களுக்காகவே அன்றி, திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள்‌ நடத்தும்‌ நிறுவனங்கள்‌ லாபம்‌ பார்க்கவும்‌, அதில்‌ கிடைக்கும்‌ கமிஷன்‌ மூலம்‌, திமுகவினர்‌ வருமானத்தைப்‌ பெருக்குவதற்கும்‌ அல்ல என்பதை திமுக அரசு உணர வேண்டும்‌. முற்றிலும்‌ அராஜகமான, அநியாயமான இந்த பத்திரப்‌ பதிவு கட்டண உயர்வு அரசாணையை திமுக அரசு உடனடியாகத்‌ திரும்பப்‌ பெற வேண்டும்‌ என்றும்‌, மாண்புமிகு சென்னை உயர்‌ நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தி, 2017 ஆம்‌ ஆண்டு வழிகாட்டி மதிப்பின்‌ அடிப்படையிலேயே கட்டணங்களை வசூலிக்க வேண்டும்‌ என்றும்‌ தமிழக பாஜக சார்பில்‌ வலியுறுத்துகிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 123

0

0