‘பிரிவினையை ஏற்படுத்தாதீங்க… முதல்ல ராணுவ வீரர் கொலை குறித்து வாய் திறக்காதது ஏன்..?’.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை போட்ட கிடுக்குப்பிடி

Author: Babu Lakshmanan
20 February 2023, 6:57 pm
Annamalai Vs Stalin - Updatenews360
Quick Share

டெல்லியில் ஏபிவிபி – எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் மோதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஏபிவிபி பிரிவு மாணவர்கள் மற்றும் எஸ்எஃப்ஐ மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, இது கோழைத்தனமான தாக்குதல் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கண்டனம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், ஒரு மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு முழு தகவலையும் அறியாமல் திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் அளித்த தவறான தகவலை வைத்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்திருப்பது வருத்தமளிக்கிறது. இந்த மெத்தனப் போக்கை, நம் மாநில மக்கள் பொறுத்துக் கொள்வதும் வருந்தத்தக்கது.

நேற்று மாலை 6.30 மணிக்கு டெல்லி ஜேஎன்யூவில் உள்ள மாணவர் செயல்பாடு மையத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜை கௌரவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏபிவிபி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், SFI-யின் நிகழ்வு கொடுக்கப்பட்ட காலஅளவை விட, கூடுதலாக இழுத்தடித்ததால் ABVP-யின் நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு தான் தொடங்கியது. ஏபிவிபியின் மாணவர்கள் இரவு 8.30 மணிக்கு இரவு உணவிற்கு வெளியே சென்றிருந்தபோது, எஸ்எஃப்ஐயைச் சேர்ந்த மாணவர்கள் செயல்பாட்டு மையத்திற்குள் நுழைந்து, ஜேஎன்யு அதிகாரிகளின் முன் அனுமதியுடன் வைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் மகா ராணா பிரதாப் ஆகியோரின் உருவப்படங்களைச் சேதப்படுத்தினர்.

SFI மாணவர்களின் இந்த செயலுக்கு ABVP மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அந்த மையத்தில் கார்ல் மார்க்ஸ் & லெனின் உருவப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியதால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இருதரப்பு மாணவர்கள் காயமடைந்தனர். இதுதான் நடந்த உண்மை கதை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் கொடூரமாக கொல்லப்பட்டது குறித்து இதுவரை வாய் திறக்காத முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு பொறுப்புள்ள முதலமைச்சராக இருதரப்பு மாணவர்களுக்கும் அறிவுரை கூற வேண்டும், சித்தாந்த வேறுபாடுகள் உள்ள சூழலில் வாழ கற்றுக்கொள்ளுங்கள், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 337

0

0