‘நேருவின் மகளே வருக’… உங்களது தந்தை சிவப்புக் கம்பளம் விரித்தது மறந்து போச்சா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி…!!

Author: Babu Lakshmanan
9 August 2023, 10:51 am

டெல்லி நிர்வாக சீர்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மத்திய அரசை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதா கடந்த 3ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நேற்று மாநிலங்களவையிலும் டெல்லி நிர்வாக மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றும், ஊழலை தடுப்பதே மசோதாவின் நோக்கம் என்றும் விளக்கமளித்தார். ஆம் ஆத்மி கட்சியை திருப்திப்படுத்தவே இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, டெல்லி நிர்வாக சட்டதிருத்த மசோதா நிறைவேறிய தினத்தை கறுப்பு தினம் எனக் கூறி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி நிர்வாக மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்! எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜக-வின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?

29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்! மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல், டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. “நான் யாருக்கும் அடிமையில்லை” என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, “கொத்தடிமையாக” தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தலைநகர் டெல்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறைக்கு மாறாக டெல்லி நிர்வாக மசோதா எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இதை நேற்று பாராளுமன்றத்திலும் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள். முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மட்டும் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தாரே அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள்.

1975ஆம் ஆண்டு, நாட்டில் எமர்ஜென்சி அறிவித்து ஜனநாயகத்தைப் படு குழியில் தள்ளிய இந்திரா காந்திக்கு, 1980ல் `நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என உங்களது தந்தை தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்தாரே அதுதான் ஜனநாயகத்தின் கறுப்பு நாள். டெல்லி ஒரு யூனியன் பிரதேசம், இது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது என்பதை மாநில உரிமைகளுடன் குழப்பிக் கொள்ளும் தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்து சொல்ல வேண்டும்.

மத்திய பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, அவர்கள் ஆதரவு தெரிவிப்பதை, பல ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை அடகு வைத்து, காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டமான திமுக விமர்சிப்பது வெட்கக்கேடானது, என தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!