நீங்க எல்லாம் பேசலாமா..? தகுதியே இல்லாதவங்களுக்கு முட்டு கொடுக்காதீங்க ; திமுக எம்பி கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி…!!

Author: Babu Lakshmanan
20 January 2024, 2:26 pm
Quick Share

திமுகவில் இருந்து கொண்டு, தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை என்று திமுக எம்பி கனிமொழிக்கு பாஜக மாநில தலைவர் பதிலடி கொடுத்தார்.

சென்னை – திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் குமரகுருதாசர் சுவாமி திருக்கோவிலில் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து கடுமையாக தாக்கி பேசினார்.

சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் குறித்து செய்தியாளர் எழுதிய கேள்விக்கு, “பார்த்து பக்குவமாக பல்லு பட்ற போகுது” என்பது போல் ஃப்ரெண்ட்லி கொஸ்டின்ஸ் கேட்டிருக்கிறார் நெறியாளர். அந்த நேர்காணலில் முக்கியமான கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை. அவர் அளித்த பேட்டியைப் பற்றி பேசி பாஜக தரம் தாழ்த்த விரும்பவில்லை, எனக் கூறினார். அதுமட்டுமில்லாமல், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் என ஆரம்பித்ததே திமுகவினர்கள் தான் என்றும், ஆனால் எதிர்கட்சிகள் திட்டமிட்டு பரப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி நாடகமாடுவதாகவும் கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், “அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்,” எனக் கூறியிருந்தார்.

கனிமொழி இந்தக் கண்டனப்பதிவு விடுத்த சில மணிநேரங்களிலேயே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். திமுகவில் இருந்து கொண்டு தரம் தாழ்ந்த அரசியலைப் பற்றி பேசலாமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், “ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை. உங்கள் தந்தை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதற்கொண்டு திமுக தெருமுனைப் பேச்சாளர்கள் வரை பேசும் தரக்குறைவான பேச்சை விட எந்தக் காலத்திலும், யாரும், யாரையும் தரக்குறைவாகப் பேசிவிட முடியாது.

அப்படி ஒரு கட்சியில் இருந்து கொண்டு, தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை. எந்தவிதத் தகுதியும் அற்றவர்களுக்கு, வெற்று விளம்பரம் மூலம் ஒரு பிம்பம் கட்டமைக்க முயல்பவர்களை, பொதுச் சமூகம் இப்படித்தான் எதிர்கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நலம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், திமுக முன்னணி தலைவர்களும் மோதிக் கொள்வது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 213

0

0