கடன் மேல் கடன் வாங்கும் திமுக அரசு… நிதிநிலையை சரி செய்யத் தெரியல ; வெறும் பஞ்சப்பாட்டு பாடுவதே வேலை.. அண்ணாமலை கோபம்!!

Author: Babu Lakshmanan
6 January 2024, 10:36 am
annamalai---stalin-updatenews360
Quick Share

திமுக அரசால் நிதி நிலையை சரி செய்யத் தெரியாமல் தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டிப்பதால்தான் தமிழகத்தின் நிதிநிலை மோசமாகிக் கொண்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அளவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாரதிய ஜனதாக் கட்சியில் இணையும் நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் 61 அதிகாரிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் பாரதிய ஜனதா கட்சியில், மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது :- பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ. ஆயிரம் வழங்குவதாக திமுக அரசு அறிவித்துள்ளது. இதற்கு நிதிநிலையை காரணமாக காட்டியுள்ளது. இதே முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, இப்போது ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். இதற்கு நிதி நிலை சீராக இல்லை என்று காரணம் சொல்கிறார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 31 மாதங்களில் மட்டும் திமுக அரசு 2.69 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை, இதனால் 8.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், 40 சதவீத தொகை திமுக ஆட்சியில் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த திமுக அரசிடம் எந்தவித திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல் வெறுமனே பஞ்சப்பாட்டு பாடுவதே திமுகவினரின் செயலாக உள்ளது. தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை. தமிழகத்தின் நிதி நிலை அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. இதே வேகத்தில் சென்றால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 வருடங்களில் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விடும்.

என்னைப் பொறுத்தவரை பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று யார் வந்தாலும் இருகரம் கூப்பி நான் வரவேற்பேன். சேலம் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, என்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.

Views: - 206

0

0