நீங்க ஒன்னு கேட்டீங்க… நாங்க 3 செய்யறோம்… அரவக்குறிச்சி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
1 April 2022, 6:16 pm
Quick Share

கரூர் : மக்களுடன் என்றும் பாஜக துணைநிற்கும் என்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி மக்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நடந்தை ஊராட்சிக்குட்பட்ட, வேட்டையார்பாளையம் கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான மின்பாதைகள் அமைப்பு பணியும் செயல்பட்டு வரும் நிலையில், கிராமத்தில் உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

ஆனால், ஒரு புறம் சென்றால் கூட பரவாயில்லை. இருபுறங்களிலும் மரக்கிளைகளை வெட்டியும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் அனுமதியோடு, இந்த தனியார் சோலார் மின் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அந்த பொதுமக்கள் பாஜக கட்சியிடம் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இடத்திற்கு தானே முன்வந்து சென்ற பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, இரு தினங்களுக்குள் இந்த பிரச்சினை தீர்ந்து விடும் என்று உறுதிபட தெரிவித்தார்.

அதே போல, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 13 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த திட்டமும் விரைவில் நிறைவேறும் என்றும் தெரிவித்தார். மேலும், அந்த பகுதியில் உள்ள 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தபால் அலுவலகம் மூலம் செல்வ மகள் திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தானே தொடங்கி, அந்த திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு தேவையான பணத்தினை தனது சொந்த நிதியிலிருந்து கட்டுவதாகவும் அறிவித்தும் சென்றார்.

இந்த நிகழ்வின் போது கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் மற்றும் பாஜக வினரும், சமூக நல ஆர்வலர்கள் பலர் உடனிருந்தனர்.

Views: - 991

0

0