இனி தமிழக பாஜக மேலும் வலுப்பெறும் ; பாஜகவில் இணைந்த விஜயதாரணியை பாராட்டி வரவேற்ற அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
24 February 2024, 2:49 pm
Quick Share

பாஜகவில் இணைந்த விஜயதாரணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக 3 முறை போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானவர். 2011,2016 மற்றும் 2021 என மூன்று முறை எம்எல்ஏவாக உள்ளவர்.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியான விஜயதாரணி பாஜகவில் இணைவார் என்ற செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால், இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வான செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்து வந்தார். இருப்பினும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், விஜயதாரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அப்போது, பேசிய அவர், “காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்ததில் மகிழ்ச்சி. மிகப் பெரிய தலைவர் பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. பா.ஜ.க-வை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியில் இணைந்துள்ளேன். பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கபடுகிறது. பிரதமர் மோடியின் சேவை நாட்டிற்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். தமிழகத்தில் பாஜகவை அண்ணாமலை வலுப்படுத்தி வருகிறார்,” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாஜகவில் இணைந்த விஜயதாரணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், “காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி விஜயதாரணி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு பிரதமர் மோடி அவர்களின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, டெல்லியில், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் திரு அரவிந்த் மேனன்
,மாநில இணை பொறுப்பாளர் திரு சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

சகோதரி விஜயதாரணி அவர்களை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 93

0

0