அண்ணாமலையின் நடைபயண துவக்க விழா… தேமுதிக பங்கேற்பா..? புறக்கணிப்பா..? விஜயகாந்த் வெளியிட்ட திடீர் அறிவிப்பு…

Author: Babu Lakshmanan
28 July 2023, 12:49 pm
Quick Share

அண்ணாமலையின் நடைபயணத்தின் துவக்க விழாவில் பங்கேற்பது குறித்த தேமுதிகவின் நிலைப்பாட்டை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை இன்று மாலை தொடங்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நடத்தப்படும் இந்த நடை பயணத்தின் போது, மத்திய அரசின் சாதனைகளையும், திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளையும் மக்களிடையே கொண்டு செல்ல அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

Annamalai - Updatenews360

இன்று மாலை 5.45 மணிக்கு விழா நடைபெறும் திடலுக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலையின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். முன்னதாக, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அண்ணாமலையின் நடைபயணத் தொடக்க விழாவில் பங்கேற்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தேமுதிகவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, இன்று நடக்கவிருக்கு யாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் தேமுதி கலந்து கொள்ளுமா..? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் பெரிதும் எழுந்திருந்தது.

காரணம், அண்மையில், டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தேமுதிகவை விட மிகவும் சிறிய கட்சிகளைக் கூட டெல்லி பாஜக மேலிடம் அழைத்திருந்தது

இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, நாங்கதான் கூட்டணியிலேயே இல்லை.. எங்களை எப்படி அழைப்பாங்க என வழக்கம் போல வசனம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தற்போது வரை எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்திருந்தார். இதனால், அண்ணாமலையின் யாத்திரை தொடக்க விழாவில் தேமுதிக இடம்பெறாது என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், புதிய திருப்பமாக, அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பர் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.

மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 193

0

0