பாஜக கூட்டணியில் டிடிவி,ஓபிஎஸ் இல்லையா…? பாஜக நிபந்தனையால் புது முடிவு… தமிழக அரசியலில் பரபர ட்விஸ்ட்!

Author: Babu Lakshmanan
29 February 2024, 1:01 pm
Quick Share

2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பிரதமர் மோடியின் தீவிர அபிமானியாக இருந்து வரும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பாஜகவின் முழு ஆதரவாளராகவே மாறிவிட்டார் என்பது அரசியலில் உள்ளோர் அனைவரும் அறிந்த விஷயம்.

அதனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு பாஜக குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளாவது ஒதுக்கும், ராஜ்யசபா எம்பி பதவி ஒன்றையும் தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனோ கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவை கடுமையாக தாக்கி பேசி வந்தார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பின்பு அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். அண்மையில் தனது கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும். நானும் ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியை தோற்கடித்து அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவோம் என்று சபதமும் எடுத்தார்.

பாஜக தலைமையிடம் 22 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதில் 11 தொகுதிகளை அமமுகவுக்கு ஒதுக்கும்படி அவர் கோரிக்கையும் வைத்தார். ஆனால் அவருக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்று பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

எப்படிப் பார்த்தாலும் தென் மாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்கு மிக்க எட்டு தொகுதிகளையும் கைப்பற்றி புதிய நாடாளுமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்துவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை டிடிவி தினகரன் ஓபிஎஸ் இருவரிடமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிப்ரவரி 27ம் தேதி நடந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயணத்தின் நிறைவு விழாவையொட்டி நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இதில் கலந்து கொள்ள டிடிவி தினகரனுக்கும், ஓபிஎஸ்க்கும் அழைப்பு விடுக்கப்படவே இல்லை.

மாறாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன், காமராஜ் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு மேடையில் இருக்கைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏனென்றால் தென் மாவட்டங்களில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் இல்லாமல் வெற்றி வாய்ப்பு என்பதையே பாஜக நினைத்து பார்க்க முடியாது என்று கூறப்படும் நிலையில் அவர்கள் இருவரும் புறக்கணிக்கப்படுகிறார்களா? என்ற சந்தேக கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

இது ஒரு புறம் இருக்க அன்று இரவே மதுரை சென்று மீனாட்சி அம்மனை தரிசித்த பிரதமர் மோடி நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கவும் செய்தார். இந்த சமயத்திலாவது மோடியை சந்தித்து விடலாம் என்று டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் நினைத்தனர். அதற்காக அவரிடம் அனுமதி பெறவும் முயற்சித்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் மறுக்கப்பட்டது.

சரி, ஒருவேளை நள்ளிரவு நேரம் ஆகிவிட்டது, பிரதமர் தூங்கச் செல்லும் நேரத்தில் அவருக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கருதி டிடிவி தினகரனும் ஓபிஎஸ்சும் அந்த நட்சத்திர விடுதியில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து விட்டு பின்னர் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக தெரிகிறது.

இதேபோல தூத்துக்குடி மற்றும் நெல்லை நகரங்களில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் அழைக்கப்படவில்லை.

இதுதான் தமிழக அரசியலில் தற்போது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணமே மாநில பாஜக தலைவர் அண்ணாமலைதான் என்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் மனம் குமுறுகின்றனர்.

ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது “எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மதுரைக்கு கீழே உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் திராவிட கட்சிகளால் இனி வெற்றி பெறவே முடியாது” என்று கூறியிருந்தார். இதில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. தென் மாவட்டங்களில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற நினைப்பது டிடிவி தினகரன் ஓபிஎஸ் இல்லாமல் நடக்காத காரியம். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி அண்ணாமலை கூறுகிறார்? என்பது முதல் கேள்வி.

அடுத்ததாக இவர்கள் இருவருமே திராவிட பாரம்பரியத்தில் தோன்றிய அரசியல் கட்சிகளில் இருந்து வந்தவர்கள்தான். அவ்வாறு இருக்கும்போது கூட்டணியில் மட்டும் டிடிவி தினகரனையும் ஓபிஎஸ்சையும் சேர்த்துக் கொள்ள அண்ணாமலையும் பாஜகவும் ஏன் விரும்புகிறது? என்ற கேள்வி அவர்களது ஆதரவாளர்களால் எழுப்பப்படுகிறது.

பாஜக கூட்டணியில் தமாகா இணைவதாக ஜி கே வாசன் அறிவித்த நிலையில் அவரை சந்தித்த அண்ணாமலை, “பாஜக கூட்டணிக்கு ஜி.கே.வாசன் முதல் அடியெடுத்து வைத்துள்ளார். அடுத்த 100 நாட்கள் எங்களை வழிநடத்தக் கூடிய நபராக அவர் இருக்கப் போகிறார்” என்று குறிப்பிட்டார்.

அப்படியென்றால் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடியும் வரை டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் விட ஜி கே வாசனுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க தமிழக பாஜக விரும்புகிறதா?…எங்கள் தலைவர்களை நம்ப மாட்டீர்களா? என்று இருவரின் ஆதரவாளர்களும் கொந்தளிக்கின்றனர்.

அதேபோல அண்ணாமலை பாஜகவுக்கு ஆதரவு பெருகவேண்டும் என்பதற்காக அளவுக்கு மீறி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாகவும் அவர்கள் புலம்புகின்றனர். “குறிப்பாக தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருகிறோம் என்று அவர் கூறுகிறார். தமிழகத்தில் இரண்டு கோடியே 40 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 13 லட்சம் பேர்
மட்டுமே அரசு ஊழியர்களாக உள்ள நிலையில் இது கனவிலும் கூட நிறைவேறாத ஒன்று. தவிர இது இளைஞர்களின் வாக்குகளை பெறுவதற்கு எந்த வகையிலும் உதவாது. பாஜக கூட்டணியில் இடம்பெறப் போகும் ஓபிஎஸ்-க்கும், டிடிவி தினகரனுக்கும் இதனால் இக்கட்டான நிலையே ஏற்படும்” என்றும் அவர்கள் கிடுக்குப் பிடி போடுகிறார்கள்.

ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான அழகு மருதுராஜூ இன்னும் ஒரு படி மேலே போய், “அண்ணாமலையின் நடை பயணத்தால் தமிழகத்தில் பாஜகவின் ஓட்டு வங்கி மூன்று சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாக உயர்ந்து விட்டதாக நினைத்தால் அது கற்பனையான ஒன்று. நாங்கள் ஓரிரு எம்பி சீட்டுக்காக பாஜகவிடம் கையேந்தி நிற்கவில்லை” என்று கொந்தளித்து இருக்கிறார்.

இந்த நிலையில்தான் பிரதமர் மோடியை டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் சந்திக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டது ஏன் என்பதற்கான காரணம் வெளியே தெரியவந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் ஒதுக்கப்படும் நாடாளுமன்ற தொகுதிகளில் தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று டெல்லி பாஜக மேலிடம் கண்டிப்புடன் கூறியதை அண்ணாமலையும் அவர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

அதைக் கேட்டதும் இருவரும் அரண்டு போய் விட்டனர். ஏனென்றால் அதற்கு முன்பாகவே ஓபிஎஸ்சின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆடிட்டர் ஒருவர் இதே கோரிக்கையை அவரிடம் வைத்திருந்தார் என்பதுதான்.

இதற்கு டிடிவி தினகரன் “நானோ தனியாக கட்சி நடத்துகிறேன், அதற்கென்று சின்னமும் இருக்கிறது. அதனால் தாமரையில் நான் போட்டியிட்டால் எனது கட்சியை கலைத்து விட்டதாக அர்த்தம் ஆகிவிடும். அது போன்றதொரு முடிவை எடுத்தால் எனது அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும். அந்த மாதிரியான வெற்றி எனக்கு தேவையே இல்லை. நான் தனித்து கூட போட்டியிட்டுக் கொள்கிறேன்” என்று பொங்கி எழுந்து விட்டதாக கூறுகிறார்கள்.

ஓபிஎஸ்சோ, “நான் அதிமுகவை மீட்க போராடிக் கொண்டிருக்கிறேன். எனது ஆதரவு வேட்பாளர்கள் தாமரையில் போட்டியிட்டால் நான் பாஜகவை சேர்ந்தவன் என்று முத்திரை குத்தி விடுவார்கள். எனவே ஒருபோதும் நான் பாஜக சின்னத்தில் போட்டியிடவே மாட்டேன்” என்று மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இந்தத் தகவல்களை டெல்லி பாஜக மேலிடத்திற்கு அண்ணாமலை தெரிவிக்க, அதற்கு அவர்களோ “பிரதமர் மோடி தமிழகத்தில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இருவரையும் பங்கேற்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தியதாகவும் இதைத் தொடர்ந்தே டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் பிரதமரை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓபிஎஸ் கூறுகையில் “தேசிய ஜனநாயக கூட்டணியில் பன்னீர்செல்வம் இல்லை என இதுவரை பாஜக அறிவிக்கவில்லை. பாஜக மாநிலத் தலைவர் மற்றும் மேலிட தலைவர்களுடன் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழகம் வந்த மோடி, எங்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஒரே குடும்பத்துக்குள் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். எனினும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி அவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனிடையே தேர்தல் பிரசாரத்துக்காக மார்ச் நான்காம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் சந்தித்து விடுவார்கள் என்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Views: - 112

0

0